ஆந்திராவுக்கு லாரியில் கடத்த முயன்ற 50 டன் ரேஷன் அரிசி பறிமுதல்; 2 பேர் கைது

திருவள்ளூர் காமராஜர் சிலை அருகே வாகன சோதனையின் போது 50 டன் ரேஷன் அரிசியை போலீசார் பறிமுதல் செய்தனர். டிரைவர்கள் 2 பேர் கைதாகினர்.

Update: 2023-09-07 11:57 GMT

அரிசி பறிமுதல்

சோழவரம் பகுதியில் இருந்து ஆந்திர மாநிலம் நகரிக்கு ரேஷன் அரிசி கடத்தப்படுவதாக போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் வந்தது. இதையடுத்து திருவள்ளூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சிபாஸ் கல்யாண் உத்தரவின் பேரில் திருவள்ளூர் டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் அந்தோணி ஸ்டாலின் தலைமையில் போலீசார் திருவள்ளூர் காமராஜர் சிலை அருகே நேற்று அதிகாலை 3 மணிக்கு வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது அந்த வழியாக வேகமாக வந்த 2 லாரிகளை சந்தேகத்தின் பேரில் போலீசார் மடக்கிப் பிடித்து சோதனை செய்தனர். சோதனையில் அந்த லாரியில் 50 கிலோ எடை கொண்ட 1,040 முட்டையில் 50 டன் ரேஷன் அரிசி இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

2 பேர் கைது

விசாரணையில் லாரி டிரைவர்கள் மீஞ்சூர் ஐயப்பன் கோவில் தெருவை சேர்ந்த பெருமாள் (வயது 29) மற்றும் கும்மிடிப்பூண்டி பால யோகி நகர் பைபாஸ் சாலையை சேர்ந்த ஜானகிராமன் (38) என்பது தெரிந்தது. போலீசார் இருவரையும் கைது செய்து ரேஷன் அரிசியுடன் 2 லாரிகளையும் பறிமுதல் செய்தனர்.

பின்னர் கைது செய்யப்பட்ட டிரைவர்கள் பெருமாள், ஜானகிராமன் மற்றும் 50 டன் ரேஷன் அரிசியை திருவள்ளூர் குடிமை பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு துறை போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

இது குறித்து குடிமை பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு துறை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்