550 பணியாளர்களை கொண்டு 50 டன் குப்பைகள் அகற்றம்

550 பணியாளர்களை கொண்டு 50 டன் குப்பைகள் அகற்றம்

Update: 2023-02-15 19:11 GMT

தஞ்சை மாநகராட்சி பகுதியில் 550 துப்புரவு பணியாளர்களை கொண்டு நடத்தப்பட்ட மெகா தூய்மை பணி முகாமை மேயர் சண்.ராமநாதன் தொடங்கி வைத்தார். இதில் 50 டன் குப்பைகள் அகற்றப்பட்டன.

தூய்மை பணி முகாம்

தஞ்சை மாநகராட்சி சார்பில் சிறப்பு தூய்மை பணி முகாம் வாரத்தில் புதன்கிழமை தோறும் நடைபெறும் என அறிவிக்கப்பட்டு சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன. குப்பை இல்லாத தஞ்சை மாநகராட்சியை உருவாக்கிட இது போன்ற சிறப்பு தூய்மை பணி முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன.

அதன்படி தஞ்சை மாநகராட்சி 14-வது வார்டில் நேற்று சிறப்பு தூய்மை பணி முகாம் நடைபெற்றது. ஆட்டுமந்தை தெரு, மீன் மார்க்கெட் உட்புறம், படைவெட்டி அம்மன் கோவில் தெரு. நெல்லுமண்டித் தெரு மற்றும் காமராஜர் தெரு உள்ளிட்ட பகுதிகளில் இந்த முகாம் நடைபெற்றது.

550 தூய்மை பணியாளர்கள்

இந்த சிறப்பு முகாமை தஞ்சை மாநகராட்சி மேயர் சண். ராமநாதன் தொடங்கி வைத்தார். துணை மேயர் டாக்டர். அஞ்சுகம் பூபதி, ஆணையர் சரவணகுமார் மற்றும் கவுன்சிலர் பாப்பா ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்த சிறப்பு தூய்மை பணியில் 550 தூய்மை பணியாளர்கள், 20 துப்புரவு பணி மேற்பார்வையாளர்கள் மற்றும் 12 துப்புரவு ஆய்வாளர்கள் கலந்துகொண்டனர்.

இப்பணி மூலம் பல்வேறு இடங்களில் காணப்பட்ட முட்புதர்கள், செடிகள், மண் மேடுகள், சாக்கடை வாய்க்காலில் தேங்கிய குப்பைகள், மண், ஆங்காங்கே சாலையோரங்களில் குவித்து வைக்கப்பட்டு இருந்த கட்டிட இடிபாடுகள் போன்றவை பொக்லின் எந்திரம் உதவியுடன் மாநகராட்சி லாரிகள் மூலம் அகற்றப்பட்டன.

50 டன் குப்பைகள் அகற்றம்

மேலும் நன்னீர் தேங்கி டெங்கு காய்ச்சல் ஏற்படுத்த கூடிய தேங்காய் சிரட்டைகள், உடைந்த மண்பாண்டங்கள், பிளாஸ்டிக் டப்பாக்கள், பிளாஸ்டிக் கப்புகள் ஆகியவை கொசுப்புழு தடுப்பு களப் பணியாளர்களால் கண்டறியப்பட்டு தூய்மை பணியாளர்கள் மூலமாக அகற்றப்பட்டது. 50 டன் குப்பைகள் அகற்றப்பட்டன.

இந்த சிறப்பு முகாமினை மாநகர் நல அலுவலர் டாக்டர் சுபாஷ்காந்தி மற்றும் துப்புரவு ஆய்வாளர் ரஞ்சித்குமார் ஆகியோர் ஒருங்கிணைத்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்