ஜாக்டோ-ஜியோ மாநாட்டில் 50 ஆயிரம் ஆசிரியர்கள் கலந்து கொள்ள முடிவு

ஜாக்டோ-ஜியோ மாநாட்டில் 50 ஆயிரம் ஆசிரியர்கள் கலந்து கொள்ள முடிவு செய்துள்ளனர்.

Update: 2022-09-04 19:49 GMT

தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்க அவசர மாநில செயற்குழு கூட்டம் திருச்சியில் நேற்று நடந்தது. கூட்டத்திற்கு மாநில தலைவர் தியாகராஜன் தலைமை தாங்கினார். மாநில செயலாளர் அருள்குமார் முன்னிலை வகித்தார். திருச்சி மாவட்ட தலைவர் நெடுஞ்செழியன் வரவேற்று பேசினார். முடிவில் மாவட்ட செயலாளர் உதுமான் அலி நன்றி கூறினார். கூட்டத்தில் மாநில பொருளாளர் உதயக்குமார் உள்ளிட்ட மாநில பொறுப்பாளர்களும் பல்வேறு மாவட்டங்களில் இருந்து 200-க்கும் மேற்பட்ட செயற்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் வருகிற 10-ந் தேதி சென்னையில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்கும் ஜாக்டோ-ஜியோ மாநாட்டில் தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கம் சார்பில் 50 ஆயிரத்துக்கும் மேலான ஆசிரியர்கள் கலந்து கொள்வது என முடிவு செய்யப்பட்டது. மேலும் வாழ்வாதார கோரிக்கையான பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்திட வேண்டும். பகுதிநேர ஆசிரியர்கள், அங்கன்வாடி பணியாளர்கள், ஊர்ப்புற நூலகர் ஆகியோரை பணி நிரந்தரம் செய்திட வேண்டும். பள்ளிக்கல்வி ஆணையர் பணியிடத்தை ரத்து செய்திட வேண்டும். இடைநிலை ஆசிரியர்கள், முதுகலை ஆசிரியர் ஆகியோருக்கு ஊதியக்குழுவின் பாதிப்புகள் களையப்பட்டு மத்திய அரசிற்கு இணையாக ஊதியம் வழங்கிட வேண்டும் என்பன உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Tags:    

மேலும் செய்திகள்