50 ஆயிரம் வாழைகள் சாய்ந்து நாசம்

கண்ணமங்கலம் அருகே புயல் மழையால் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாழைகள் சாய்ந்து நாசமானது. உதவி கலெக்டர் தனலட்சுமி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

Update: 2022-12-10 16:23 GMT

கண்ணமங்கலம்

கண்ணமங்கலம் அருகே புயல் மழையால் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாழைகள் சாய்ந்து நாசமானது. உதவி கலெக்டர் தனலட்சுமி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

வாழைகள்

திருவண்ணாமலை மாவட்டம் கண்ணமங்கலம் அருகே படவேடு பகுதியைச் சுற்றி வெள்ளூர், துளுவபுஷ்பகிரி, சந்தவாசல், தேவனாங்குளம் உள்பட பல்வேறு கிராமங்களில் விவசாயிகள் ஒரு லட்சம் வாழை மரங்களை பயிரிட்டு உள்ளனர்.

இதில் மஞ்சள், ரஸ்தாளி, கற்பூரம், செவ்வாழை உள்ளிட்ட வாழை ரகங்கள் பயிராகி உள்ளன. வாழை மரங்கள் குலை தள்ளி விளைந்து வந்தன. இன்னும் சில நாட்களில் அறுவடைக்கு தயாராக இருந்தது.

இந்த நிலையில் மாண்டஸ் புயல் காரணமாக நேற்று மாலை முதல் விடிய விடிய சூறைக்காற்றுடன் பலத்த மழை பெய்தது. இதனால் அப்பகுதியில் பயிரிடப்பட்டிருந்த 50 ஆயிரத்திற்கும் மேலான வாழை மரங்கள் சாய்ந்து நாசமானது. இதில் லட்சக்கணக்கில் நஷ்டம் ஏற்பட்டதாக விவசாயிகள் வேதனையுடன் தெரிவித்தனர்.

உதவி கலெக்டர் ஆய்வு

சேதமடைந்த வாழைத்தோட்டங்களை ஆரணி உதவி கலெக்டர் தனலட்சுமி நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது விவசாயிகள் தங்களுக்கு உரிய நஷ்ட ஈட்டை வழங்க ஆவன செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.

தோட்டக்கலை துறையினர் நேரில் வந்து பார்வையிட்டு கணக்கீடு செய்து உரிய நஷ்டஈடு வழங்கப்படும் என்று உதவி கலெக்டர் கூறினார்.

வாழைத்தோட்டங்கள் சேதமதிப்பு குறித்து தோட்டக்கலை துறையினர் நேரில் வந்து ஆய்வு செய்து வருகின்றனர் என சந்தவாசல் வருவாய் ஆய்வாளர் சுரேஷ் தெரிவித்தார்.

தரைப்பாலம் வேண்டும்

மேலும் கமண்டலாபுரம், மல்லிகாபுரம், ராமநாதபுரம், கொல்லைமேடு உள்பட பல்வேறு கிராம மக்களின் கோரிக்கையான கமண்டல நதியில் தரைப்பாலம் அமைக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் உதவி கலெக்டர் தனலட்சுமியிடம் கோரிக்கை செய்தனர்.

தொடர்ந்து மேல் நகர் கிராமத்தில் உள்ள பெரிய ஏரியை உதவி கலெக்டர் தனலட்சுமி பார்வையிட்டார். ஏரி வாய்க்காலில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்ட இடத்தையும் அவர் பார்வையிட்டார்.

அப்போது போளூர் தாசில்தார் சண்முகம், சந்தவாசல் வருவாய் ஆய்வாளர் சுரேஷ், படவேடு கிராம நிர்வாக அலுவலர் மகாலிங்கம் ஆகியோர் உடனிருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்