கோவில்களுக்கு சொந்தமான 50 ஆயிரம் ஏக்கர் நிலம் அளவீடு அமைச்சர் சேகர்பாபு தகவல்

தமிழகத்தில் உள்ள கோவில்களுக்கு சொந்தமான 50 ஏக்கர் நிலம் இதுவரை அளவீடு செய்யப்பட்டு உள்ளதாக அமைச்சர் சேகர்பாபு தெரிவித்தார்.

Update: 2022-06-01 22:06 GMT

சென்னை,

இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோவில்களுக்கு சொந்தமான நிலங்களில் முதல்கட்டமாக 50 ஆயிரம் ஏக்கர் நிலம் அளவீடு செய்யும்பணி நிறைவு செய்யப்பட்டு உள்ளது. தற்போது காஞ்சீபுரம் மாவட்டம், உத்திரமேரூர் தாலுகா, திருப்புலிவனம் கிராமத்தில் உள்ள வியாக்ரபுரீசுவரர் கோவிலுக்கு சொந்தமான நிலத்தில் 50 ஆயிரத்து 1 ஏக்கர் நிலம் அளவீடு செய்யும் பணிகளை தமிழக குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் அமைச்சர் தா.மோ. அன்பரசன், இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு ஆகியோர் தொடங்கி வைத்தனர்.

இதுகுறித்து அமைச்சர் சேகர்பாபு கூறியதாவது:-

தமிழக கோவில்களுக்கு சொந்தமான நிலங்கள் அளவீடு செய்யும் பணிகள் தொடங்கப்பட்டு சிறந்த முறையில் நடைபெற்று வருகிறது. இந்த துறையின் சீரிய முயற்சியால் கோவிலுக்குச் சொந்தமான நிலங்களை அளவீடு செய்வதற்கு 150 உரிமம் பெற்ற நில அளவர்கள் பணி நியமனம் செய்யப்பட்டு, மாநிலத்தின் 20 மண்டலங்களிலும் இணை கமிஷனர்களின் நேரடி கட்டுப்பாட்டில் 50 குழுக்களாக பணி அமர்த்தப்பட்டு பணிகள் விரைவாக நடந்து வருகிறது.

நவீன கருவிகள்

மயிலாப்பூர் கற்பகாம்பாள் உடனுறை கபாலீசுவரர் கோவிலுக்கு சொந்தமான 4.52 ஏக்கர் நிலம் அளவீடு செய்யப்பட்டு எல்லைக்கற்கள் நடும்பணி தொடங்கப்பட்டது. தமிழ்நாடு முழுவதும் கோவில் நிலங்கள் கண்டறியப்பட்டு அளவீடு செய்யும் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த பணியை விரைவுபடுத்தும் பொருட்டு 66 நில அளவர்கள் குழுக்களை ஏற்படுத்தி 66 நவீன கருவிகளை கொண்டு நில அளவீடு மற்றும் எல்லை கற்கள் நடும்பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதனை விரிவுப்படுத்தும் வகையில் விரைவில் 100 குழுக்களை ஏற்படுத்தி வேகமாக இன்னும் 3 மாதங்களுக்குள் ஒரு லட்சம் அளவுக்கு இந்த நிலங்கள் அளவிடும் பணி நிறைவு செய்யப்படும்.

50 ஏக்கர் நிலம் அளவீடு

இதுவரை தமிழகத்தில் உள்ள 20 மண்டலங்களில், 238 கிராமங்களில், 49 ஆயிரத்து 996.28 ஏக்கர் பரப்பளவுள்ள நிலங்கள் அளவீடு செய்யப்பட்டுள்ளது. காஞ்சீபுரம் மாவட்டம், உத்திரமேரூர் தாலுகா திருப்புலிவனம் கிராமத்தில் 9.72 ஏக்கர் நிலங்கள் அளவீடு செய்யப்பட்டுள்ளது. கோவிலுக்கு சொந்தமான ஆவணங்களை சுமார் 4 கோடி பக்கங்களை பதிவேற்றம் செய்யப்பட்டு, கோவில் சொத்துகளை இணையதளத்தில் வெளியிடும் பணிகளும் தொடர்ந்து நடந்து கொண்டிருக்கிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

நிகழ்ச்சியில் இந்து சமய அறநிலையத்துறை கமிஷனர் குமரகுருபரன், காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர் ஆர்த்தி, க.செல்வம் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் க.சுந்தர், சி.வி.எம்.பி.எழிலசரன் உள்பட வருவாய்த்துறை, அறநிலையத்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்