கடன் பெற்று தருவதாக கூறி 50 பவுன் நகைகள், ரூ.50 லட்சம் மோசடி

விராலிமலை அருகே கடன் பெற்று தருவதாக 50 பவுன் தங்க நகைகள், ரூ.50 லட்சம் பெற்று மோசடி செய்த பெண் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

Update: 2023-09-16 18:21 GMT

சுயஉதவி குழுக்கள்

புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை தாலுகா பாரப்பட்டி கிருஷ்ணாபுரத்தை சேர்ந்தவர் கிருஷ்ணசாமி மனைவி லட்சுமி. இவர் அப்பகுதி பெண்களிடம் சுய உதவி குழுக்கள் நீங்கள் ஆரம்பித்தால் பல லட்சம் கடன் பெற்று தருவதாக அவர்களிடம் ஆசை வார்த்தை கூறியுள்ளார்.

அதனை நம்பி அப்பகுதியை சேர்ந்த பல பெண்கள் ஒன்று சேர்ந்து தனித்தனி குழுக்கள் அமைத்துள்ளனர். அதனைதொடர்ந்து குழுவிற்கு பணம் பெற்று தருகிறேன் எனக் கூறி லட்சுமி அனைவரிடமும் கையெழுத்து பெற்று திருச்சி கருமண்டபத்தில் உள்ள பின்கேர் நிறுவனத்தில் கையெழுத்து பெற்ற ஆவணங்களை கொடுத்து அவர் பெயரில் பணம் பெற்றதாக கூறப்படுகிறது.

தங்க நகைகளும் அடகு

அதன்பின்னர் குழு பெண்கள் அவரிடம் பணம் கேட்கும் போது சிறு தொகையை ஒவ்வொரு குழுவிற்கும் அவ்வப்போது அளித்து வந்துள்ளார். அதுமட்டுமின்றி தனது தாய், தந்தைக்கு உடல்நிலை சரியில்லாததால் சிகிச்சைக்காக பணம் தேவைப்படுவதாக குழு பெண்கள் மற்றும் அவர்களின் கணவர் மட்டுமின்றி அப்பகுதியை சேர்ந்த சிலரிடம் தங்க நகைகளை பெற்று அதையும் அதே நிறுவனத்தில் அடகு வைத்துள்ளார்.

இந்நிலையில் குழு மூலம் பெற்ற கடன் தொகையை முழுமையாக தராமல் நீண்ட நாட்களாக லட்சுமி இழுத்தடித்து வந்துள்ளார். இதனால் அவர் மீது சந்தேகமடைந்த பெண்கள் திருச்சி கருமண்டபத்தில் உள்ள நிதி நிறுவனத்தை தொடர்பு கொண்டு இதுகுறித்து கேட போது குழு பணம் எல்லாம் லட்சுமியிடம் கொடுத்து விட்டதாக கூறியுள்ளனர்.

அனுமதி கிடைக்கவில்லை

இதனைக்கேட்டு அதிர்ச்சியடைந்த அவர்கள் அடகு வைத்த நகைகளை தருமாறு கூறி அந்த நகைக்கு பணம் கட்டியுள்ளனர். பணத்தை பெற்றுக்கொண்ட நிறுவன ஊழியர் நகையை உங்களிடம் கொடுப்பதற்கு தலைமை இடத்திலிருந்து அனுமதி கிடைத்தவுடன் தருவதாக கூறி அந்த பெண்களை திருப்பி அனுப்பி உள்ளார்.

அதனைத்தொடர்ந்து சில நாட்கள் கழித்து பெண்கள் சிலர் அந்த நிறுவனத்திற்கு மீண்டும் சென்று பணம் தான் பெற்றுக் கொண்டீர்களே நகையை கொடுங்கள் என்று கேட்கும்போது தலைமை இடத்தில் இருந்து இன்னும் அனுமதி கிடைக்கவில்லை என்று கூறி அவர்களை திருப்பி அனுப்பினர்.

வழக்கு

இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதி பெண்கள் மற்றும் ஆண்கள் என 30-க்கும் மேற்பட்டோர் விராலிமலை போலீஸ் நிலையத்தில் தனித்தனியாக புகார் மனு அளித்தனர். அதில் எங்கள் பெயரில் ரூ.50 லட்சம் வரை கடன் பெற்று மோசடி செய்துள்ளதாகவும், அதோடு சுமார் 50 பவுன் தங்க நகைகளை அவரிடம் கொடுத்துள்ளதாகவும் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து விராலிமலை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்