நெல் தரிசில் பயிரிட 50 சதவீத மானியத்தில் உளுந்து விதைகள்; அதிகாரி தகவல்

திருவண்ணாமலை வட்டாரத்தில் நெல் தரிசில் பயிரிட 50 சதவீத மானியத்தில் உளுந்து விதைகள் பெற்று பயன்பெறலாம் என்று வேளாண்மை அதிகாரி தெரிவித்து உள்ளார்.

Update: 2023-02-02 11:43 GMT

திருவண்ணாமலை வட்டாரத்தில் நெல் தரிசில் பயிரிட 50 சதவீத மானியத்தில் உளுந்து விதைகள் பெற்று பயன்பெறலாம் என்று வேளாண்மை அதிகாரி தெரிவித்து உள்ளார்.

இதுகுறித்து திருவண்ணாமலை வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் அன்பழகன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

நெல் தரிசில் பயறு சாகுபடி

திருவண்ணாமலை வட்டத்தில் கடந்த சம்பா பருவத்தில் சுமார் 7,500 ஏக்கரில் நெல் பயிரிட்டு தற்போது அறுவடை ஆகி வருகிறது. தற்போது போதுமான தண்ணீரும் கிணறுகளில் உள்ளது. எனவே விவசாயிகள் 65 முதல் 70 நாட்களில் நெல் தரிசு நிலங்களில் உளுந்து சாகுபடி செய்வதன் மூலம் குறுகிய காலத்தில் கூடுதல் வருமானம் பெற இயலும். தற்போது தமிழ்நாடு அரசு பயறு உற்பத்தியை அதிகரிக்கும் வகையில் நெல் தரிசில் பயறு சாகுபடி எனும் திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. அத்திட்டத்தின் படி விவசாயிகளுக்கு 50 சதவீத மானிய விலையில் உளுந்து விதை விநியோகிக்கப்பட்டு வருகிறது. அதற்கு தேவையான உளுந்து விதைகள் திருவண்ணாமலை காந்தி நகரில் இயங்கி வரும் வேளாண்மை விரிவாக்க மையம் மற்றும் தச்சப்பட்டில் உள்ள துணை வேளாண்மை விரிவாக்க மையம் ஆகியவற்றில் இருப்பில் உள்ளது.

50 சதவீத மானியத்தில்...

திருவண்ணாமலை வட்டாரத்தில் இந்த திட்டத்தின் கீழ் 22 டன் விநியோகம் செய்திட இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. நெல் தரிசில் உளுந்து பயிரிடுவதால் கூடுதல் வருமானம் பெறுவதோடு, மண்வளம் பாதுகாக்கப்படுகிறது.

காற்றில் உள்ள தாழைச்சத்தினை மண்ணில் உளுந்து பயிரில் உள்ள நுண்ணயிரிகள் நிலை நிறுத்துவதனால் அடுத்த பயிரிடப்பட உள்ள பயிருக்கு கூடுதல் சத்து கிடைக்கும். எனவே இந்த வாய்ப்பை பயன்படுத்தி விவசாயிகள் 50 சதவீத மானிய விலையில் உளுந்து விதைகளை பெற்ற பயன்பெறலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்