நாட்டுக் கோழிப்பண்ணை அமைக்க 50 சதவீதம் மானியம்

நாட்டுக் கோழிப்பண்ணை அமைக்க 50 சதவீதம் மானியம் வழங்கப்படும் என்று கலெக்டர் கூறினார்.

Update: 2023-07-29 18:45 GMT

விழுப்புரம்:

தமிழ்நாட்டில் "கிராமப்புறங்களில் சிறிய அளவிலான (250 கோழிகள், அலகு) " நாட்டுக் கோழிப்பண்ணை அமைக்கும் திட்டம் நடைமுறைப்படுத்தப்படுகிறது. விழுப்புரம் மாவட்டத்தில் நடப்பு நிதியாண்டில் 50 சதவீத மானியத்துடன் இத்திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. இதற்காக மாவட்டத்தில் 3 பயனாளிகளை தேர்ந்தெடுத்திட கோழி வளர்ப்பில் ஆர்வமுள்ள, விருப்பமுள்ள விவசாயிகள் இத்திட்டத்திற்கு விண்ணப்பிக்கலாம். 250 கோழிகளை வளர்க்கக்கூடிய கோழிப்பண்ணை அமைக்க குறைந்தபட்சம் 625 சதுர அடி நிலம் இருக்க வேண்டும்.

இப்பகுதி மனித குடியிருப்புகளிலிருந்து விலகி இருக்க வேண்டும், பயனாளி அந்த கிராமத்தில் நிரந்தரமாக வசிப்பவராக இருக்க வேண்டும். விதவைகள், கணவரால் கைவிடப்பட்ட பெண்கள், ஆதரவற்றோர், திருநங்கைகள், மாற்றுத்திறனாளிகளுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.

மேலும் தேர்ந்தெடுக்கப்பட்ட பயனாளிகளில் 30 சதவீதம் தாழ்த்தப்பட்ட, பழங்குடியினத்தை சேர்ந்தவர்களாக இருக்க வேண்டும். இதற்கு முன் அரசு வழங்கிய கோழி வளர்ப்பு திட்டத்தில் பயனடைந்தவராக இருத்தல் கூடாது.

50 சதவீதம் மானியம்

நாட்டுக்கோழி வளர்ப்பதில் ஆர்வமும், திறமையும் உள்ள கிராமப்புற பயனாளிகளுக்கு இத்திட்டத்தை செயல்படுத்த தேவையான கோழிக்கொட்டகை, கட்டுமான செலவு, உபகரணங்கள் வாங்கும் செலவு (தீவனத்தட்டு மற்றும் தண்ணீர் வைக்கும் தட்டு), 4 மாதங்களுக்கு தேவையான தீவன செலவு (கோழி வளரும் வரை) ஆகியவற்றுக்கான மொத்த செலவில் 50 சதவீத மானியமாக ரூ.1 லட்சத்து 50 ஆயிரத்து 625 மாநில அரசால் வழங்கப்படும். இத்திட்டத்தின் மீதமுள்ள 50 சதவீதம் பங்களிப்பை வங்கி கடன் மூலமாகவோ அல்லது தனது சொந்த ஆதாரங்கள் மூலமாகவோ திரட்ட வேண்டும். ஒவ்வொரு பயனாளிகளுக்கும் 250 எண்ணிக்கையிலான 4 வார வயதுடைய நாட்டுக்கோழி குஞ்சுகள் ஒசூர் மாவட்ட கால்நடை பண்ணையிலிருந்து இலவசமாக வழங்கப்படும்.

விண்ணப்பிக்கும் பயனாளிகள், விண்ணப்பத்துடன் ஆதார் அட்டை நகல், பண்ணை அமையவிருக்கும் இடத்திற்கான சிட்டா, அடங்கல் நகல், 50 சதவீதம் தொகை ஆதார ஆவணங்கள் (வங்கி இருப்பு விவரம், வங்கி கடன் ஒப்புதல் விவரம், பயனாளி கோழிப்பண்ணையை தொடர்ந்து 3 வருடங்களுக்கு குறையாமல் பராமரிக்க உத்தரவாத கடிதம் மற்றும் 2022-23-ம் ஆண்டிற்கான நாட்டுக்கோழி வளர்ப்பு திட்டத்தின் கீழ் பயனடையவில்லை என்பதற்கான சான்றிதழ்) அளித்தல் வேண்டும். எனவே இத்திட்டத்தில் சேர விருப்பமுள்ள பயனாளிகள் தங்கள் கிராமத்திற்கு அருகில் உள்ள அரசு கால்நடை மருத்துவமனையை, கால்நடை மருந்தகத்தை அணுகி விண்ணப்பம் பெற்று பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தை உரிய ஆவணங்களுடன் வருகிற 4.8.2023-க்குள் அதே கால்நடை மருத்துவமனையில், கால்நடை மருந்தகத்தில் ஒப்படைக்கலாம்.

இந்த தகவலை மாவட்ட கலெக்டர் சி.பழனி தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்