திண்டிவனத்தில்தனியார் நிறுவனம் நடத்தி 150 பேரிடம் ரூ.50½ லட்சம் மோசடி6 பேர் மீது வழக்கு

திண்டிவனத்தில் தனியார் நிறுவனம் நடத்தி 150 பேரிடம் ரூ.50½ லட்சத்தை மோசடி செய்த 6 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

Update: 2023-07-28 18:45 GMT

தனியார் நிறுவனம்

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம்- மரக்காணம் சாலையில் கடந்த 2014-ல் தனியார் நிறுவனம் ஒன்று இயங்கியது. இந்நிறுவனத்தில் கட்டும் பணத்திற்கு வட்டியுடன் பணமாகவோ அல்லது இடமாகவோ வழங்கப்படும் என்று அந்நிறுவனத்தினர் கூறினர். இதை நம்பிய திண்டிவனம் தாலுகா அண்டம்பட்டு கிராமத்தை சேர்ந்த ராஜேஸ்வரி (வயது 61) என்பவர் அந்நிறுவனத்திற்கு சென்றார். அப்போது அங்கிருந்த திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் டி.என்.பேட்டை முல்லை நகர் பகுதியை சேர்ந்த குப்புசாமி, அவரது மகன் கார்த்தி, விழுப்புரம் அருகே அசோகபுரி அண்ணா சிலை தெருவை சேர்ந்த கலியபெருமாள், விழுப்புரம் அருகே சாத்தனூர் சிவன் கோவில் தெருவை சேர்ந்த ஜெயராமன், பிரம்மதேசம் காளியம்மன் கோவில் தெருவை சேர்ந்த சிவக்குமார், முட்டத்தூர் வடக்கு தெருவை சேர்ந்த திருமுருகன் ஆகியோர் தாங்கள் அனைவரும் ஒன்றுசேர்ந்து இந்நிறுவனத்தை நடத்தி வருவதாகவும், அரசால் பதிவு செய்யப்பட்டு நடத்தி வருவதாகவும் கூறியுள்ளனர்.

ரூ.50½ லட்சம் மோசடி

இதை நம்பிய ராஜேஸ்வரி மற்றும் அவரது குடும்பத்தினர் வாடிக்கையாளராக அந்நிறுவனத்தில் சேர்ந்து மாத சந்தாவாக 3 மாதத்திற்கு ஒருமுறை ரூ.1,035 வீதம் மொத்தம் ரூ.6 லட்சத்து 30 ஆயிரத்து 600-ஐ கட்டியுள்ளனர். இதேபோல் திண்டிவனம் சுற்றுவட்டார பகுதிகளான கோட்டிக்குப்பம், வயலூர் நெற்குணம், சொக்கந்தாங்கல், சிறுவாடி, அண்டம்பட்டு உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த 150-க்கும் மேற்பட்டோர் அந்நிறுவனத்தில் மாதந்தோறும் பணம் கட்டினர். இவ்வாறாக அவர்கள் அனைவரும் ரூ.50 லட்சத்து 57 ஆயிரத்து 605-ஐ அந்நிறுவனத்தில் கட்டியுள்ளனர்.

ஆனால் சந்தா காலக்கெடு 5 ஆண்டுகள் முடிவடைந்த நிலையில் உரியவர்களுக்கு அந்நிறுவனத்தினர் பணத்தை திருப்பித்தராமல் காலம் தாழ்த்தி வருகின்றனர். மேலும் அந்நிறுவனத்திற்கு சொந்தமான ஊருக்கு ஒதுக்குப்புறமாக சின்னநெற்குணம், வரகுப்பட்டு ஆகிய இடங்களில் சதுரடி ரூ.100-க்கு விற்பனையாகும் இடத்தில் ரூ.350-க்கு வாங்கச்சொல்லி அந்நிறுவனத்தினர் மிரட்டி வருவதோடு பணத்தையும் கொடுக்காமல் ஏமாற்றி மோசடி செய்து வருகின்றனர்.

6 பேர் மீது வழக்கு

இதுகுறித்து பாதிக்கப்பட்ட மக்கள், விழுப்புரம் மாவட்ட குற்றப்பிரிவு போலீசில் புகார் செய்தனர். அதன்பேரில் குப்புசாமி உள்ளிட்ட 6 பேர் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்