சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வியாபாரிக்கு 5 ஆண்டுகள் சிறை

சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வியாபாரிக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது

Update: 2023-06-23 19:56 GMT

சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வியாபாரிக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தஞ்சை போக்சோ கோர்ட்டு தீர்ப்பு அளித்தது.

புடவை வியாபாரி

தஞ்சை வடக்குவாசல் பகுதியை சேர்ந்தவர் ராஜா(வயது 65). இவர்,. சைக்கிளில் தெருத்தெருவாக சென்று புடவை வியாபாரம் செய்து வந்தார். கடந்த 2021-ம் ஆண்டு வல்லம் பகுதியில் புடவை விற்பதற்காக சென்றார். அப்போது ஒரு பெண் புடவை வாங்கிக்கொண்டு இருந்தார்.

அந்த பெண்ணின் 7 வயது சிறுமி வீட்டிற்கு வெளியே நின்று கொண்டு இருந்தார். புடவை வாங்கிய அந்த பெண் அதனை வீட்டிற்கு எடுத்துச்சென்று பார்த்தார். அப்போது வெளியே நின்று கொண்டு இருந்த சிறுமிக்கு, ராஜா பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது.

5 ஆண்டுகள் சிறை

இதையடுத்து சிறுமி அழுது கொண்டே வீட்டிற்குள் சென்று நடந்த சம்பவத்தை தனது தாயிடம் கூறியது. அதற்குள் ராஜா அங்கிருந்து தப்பி செல்ல முயன்றார். அப்போது அந்த பகுதியில் உள்ளவர்கள் அவரை பிடித்து போலீசில் ஒப்படைத்தனர். இது தொடர்பாக வல்லம் அனைத்து மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் கலைவாணி, ராஜாவை கைது செய்து விசாரணை நடத்தினார்.

தஞ்சை போக்சோ கோர்ட்டில் நடந்து வந்த இந்த வழக்கில் நேற்று தீர்ப்பு கூறப்பட்டது. ராஜாவுக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.10 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி சுந்தர்ராஜன் உத்தரவிட்டார். மேலும் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு ரூ.50 ஆயிரம் இழப்பீடு வழங்கவும் அவர் உத்தரவிட்டார்.

இந்த வழக்கில் அரசு தரப்பில் வக்கீல் சசிரேகா ஆஜராகி வாதாடினார்.

Tags:    

மேலும் செய்திகள்