தீபாவளி சீட்டு நடத்தி மோசடியில் ஈடுபட்ட வாலிபருக்கு 5 ஆண்டு சிறை

திருவண்ணாமலையில் தீபாவளி சீட்டு நடத்தி மோசடியில் ஈடுபட்டவருக்கு 5 ஆண்டு சிறை தண்டனையும், பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு வழங்க ரூ.13¾ லட்சத்தை திருப்பி ஒப்படைக்கவும் திருவண்ணாமலை தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர் கோர்ட்டு உத்தரவிட்டது.

Update: 2022-12-30 16:58 GMT

திருவண்ணாமலையில் தீபாவளி சீட்டு நடத்தி மோசடியில் ஈடுபட்டவருக்கு 5 ஆண்டு சிறை தண்டனையும், பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு வழங்க ரூ.13¾ லட்சத்தை திருப்பி ஒப்படைக்கவும் திருவண்ணாமலை தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர் கோர்ட்டு உத்தரவிட்டது.

தீபாவளி சீட்டு நடத்தி மோசடி

திருவண்ணாமலை டவுன் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் கார்த்திகேயன் (வயது 34). இவர் கடந்த 2018-19-ம் ஆண்டில் தீபாவளி சீட்டு நடத்தி வந்தார்.

இந்த தீபாவளி சீட்டில் 2 கிராம் தங்கம், 25 கிராம் வெள்ளி, அரை கிலோ இனிப்பு, பட்டாசு பெட்டி, பித்தளை, சில்வர் பாத்திரம் உள்ளிட்டவை வழங்குவதாக ஆசை வார்த்தை கூறப்பட்டது.

அப்போது ஏஜெண்டுகள் மூலம் சுமார் 204 பேரிடம் மாதம் ரூ.600 என்ற முறையில் சீட்டு பணம் வசூலிக்கப்பட்டது. இதன் மூலம் கிடைத்த ரூ.14 லட்சத்து 68 ஆயிரத்து 800 பணத்தை அவர் மோசடி செய்து தலைமறைவானார்.

இதுகுறித்து சீட்டு பணம் வாங்கி கொடுத்த ஏஜெண்டுகள் திருவண்ணாமலை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம், மாவட்ட கலெக்டர் அலுவலகம் உள்ளிட்ட அலுவலகங்களில் புகார் மனு அளித்தனர்.

மேலும் வேட்டவலம் அருகில் ஆவூர் கிராமத்தை சேர்ந்த மரகதம் என்பவர் கொடுத்த புகாரின் பேரில் திருவண்ணாமலை மாவட்ட குற்றப்பிரிவு போலீஸ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி தலைமறைவான கார்த்திகேயனை கண்டு பிடித்து கைது செய்தனர்.

5 ஆண்டு சிறை

இந்த சம்பவம் தொடர்பான வழக்கு விசாரணை திருவண்ணாமலை மாவட்ட ஒருங்கிணைந்த கோர்ட்டு வளாகத்தில் உள்ள தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர் கோர்ட்டில் நடைபெற்று வந்தது.

இந்த நிலையில் இவ்வழக்கை விசாரித்த நீதிபதி ஈஸ்வரமூர்த்தி இன்று தீர்ப்பு கூறினார்.

இதில் தீபாவளி சீட்டு நடத்தி மோசடியில் ஈடுபட்ட கார்த்திகேயனுக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.5 ஆயிரம் அபராதமும் விதித்தார்.

மேலும் அபராத தொகைகளை கட்ட தவறினால் கூடுதலாக ஒரு ஆண்டு சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டார்.

அதுமட்டுமின்றி பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு வழங்க ரூ.13 லட்சத்து 84 ஆயிரம் கார்த்திகேயன் திருப்பி ஒப்படைக்கவும் உத்தரவிட்டு தீர்ப்பினை வழங்கினார்.

இதையடுத்து கார்த்திகேயனை போலீசார் வேலூர் மத்திய சிறைக்கு அழைத்து சென்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்