சேலத்தில் ஓடும் பஸ்களில் பயணிகளிடம் திருடிய 5 பெண்கள் கைது
சேலத்தில் ஓடும் பஸ்களில் பயணிகளிடம் திருடிய 5 பெண்களை போலீசார் கைது செய்தனர்.
சேலம்,
பணம் திருட்டு
சேலம் பொன்னம்மாபேட்டை பகுதியை சேர்ந்தவர் கார்த்திக் (வயது 25). இவர் நேற்று முன்தினம் அயோத்தியாப்பட்டணத்துக்கு டவுன் பஸ்சில் சென்று கொண்டிருந்தார். பஸ் அம்மாபேட்டை ரவுண்டானா அருகே சென்ற போது 2 பெண்கள் கார்த்திக்கின் சட்டைப்பையில் இருந்த ரூ.550-யை நைசாக திருடினர். இதை பார்த்த சக பயணிகள் அந்த பெண்களை பிடித்து அம்மாபேட்டை போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
அவர்களிடம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கிருஷ்ணமூர்த்தி விசாரணை நடத்தினார். இதில் அவர்கள் திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் பகுதியை சேர்ந்த கஸ்தூரி (25), விமலா (28) ஆகியோர் என்பது தெரியவந்தது. இதையடுத்து அவர்களை போலீசார் கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து ரூ.550 பறிமுதல் செய்யப்பட்டது.
துறையூரை சேர்ந்தவர்கள்
சேலம் பொன்னம்மாபேட்டை பகுதியை சேர்ந்தவர் காளியம்மாள் (43). இவர் சேலம் புதிய பஸ் நிலையத்துக்கு தனியார் பஸ்சில் வந்து கொண்டிருந்தார். புதிய பஸ் நிலையம் அருகே பஸ் வந்த போது காளியம்மாள் வைத்திருந்த ரூ.500-யை 3 பெண்கள் திருடிக் கொண்டு தப்ப முயன்றனர்.
இதை கவனித்த சக பயணிகள் அவர்களை பிடித்து பள்ளப்பட்டி போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். இதையடுத்து போலீசார் விசாரணை நடத்தியதில் அவர்கள் திருச்சி மாவட்டம் துறையூர் பகுதியை சேர்ந்த பாரதி (45), வீரம்மாள் (36), வள்ளி (35) ஆகியோர் என்பது தெரியவந்தது. இதையடுத்து அவர்களை போலீசார் கைது செய்ததுடன் ரூ.500 பறிமுதல் செய்தனர்.