மூதாட்டியிடம் 5 பவுன் சங்கிலி பறிப்பு

மூதாட்டியிடம் 5 பவுன் சங்கிலியை பறித்து சென்ற மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

Update: 2022-10-19 18:45 GMT

விழுப்புரம் மாவட்டம் வானூர் அருகே உள்ள மொளச்சூரை சேர்ந்தவர் ராணி (வயது 60). கணவர் இறந்துவிட்ட நிலையில் மொளச்சூர் மெயின் ரோட்டில் டீக்கடை வைத்து நடத்தி வருகிறார்.

நேற்று முன்தினம் இரவு டீக்கடைக்கு 2 வாலிபர்கள் மோட்டார் சைக்கிளில் வந்தனர். ஒருவர் மட்டும் இறங்கி அங்கு டீ குடித்தார். மற்றொருவர் சாலையிலேயே நின்று கொண்டிருந்தார்.

அப்போது கடையில் யாரும் இல்லாததை பயன்படுத்தி டீ குடித்த ஆசாமி திடீரென்று ராணியின் கழுத்தில் கிடந்த 5 பவுன் தங்கச் சங்கிலியை பறித்துக் கொண்டு கடைக்கு வெளியே தயாராக நின்று கொண்டிருந்த கூட்டாளியுடன் தப்பிச் சென்று விட்டார்.

அப்போது தான் டீ குடிப்பது போல் நடித்து அவர்கள் நகை பறிப்பில் ஈடுபட்டதை அறிந்து ராணி அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்த புகாரின் பேரில் கிளியனூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பிச்சென்ற வாலிபர்களை வலைவீசி தேடி வருகிறார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்