மரத்தில் கார் மோதி அதிகாரி உள்பட 5 பேர் படுகாயம்

தென்காசி அருகே மரத்தில் கார் மோதிய விபத்தில் அதிகாரி உள்பட 5 பேர் படுகாயம் அடைந்தனர்.

Update: 2022-08-18 17:48 GMT

தென்காசி அருகே உள்ள ஆய்க்குடி போலீஸ் சரகம் கம்பிளி ஊரில் வயலில் விவசாயிகள் சூரியகாந்தி பூக்களை விவசாயம் செய்து வருகிறார்கள். இந்த பூக்கள் தற்போது நன்கு வளர்ந்து உள்ளது. இதனை கண்டு ரசிக்க தினமும் கேரள மாநிலத்தில் இருந்து இளைஞர்கள் கார்கள் மற்றும் இருசக்கர வாகனத்தில் வந்து செல்கிறார்கள்.

அவ்வாறு நேற்று மாலை ஒரு கார் கம்பிளி ஊருக்கு வந்தது. அந்த காரில் திருவனந்தபுரம் நெடுமங்காடு பகுதியைச் சேர்ந்த சுரேஷ் (வயது 52), அவரது மனைவி மினி (51), அதே பகுதியை சேர்ந்த தீபு (50), பிஜூ (52), கோட்டயத்தைச் சேர்ந்த பிரசாந்த் (59) ஆகியோர் வந்தனர். இவர்கள் சூரியகாந்தி பூக்களை பார்த்து புகைப்படம் எடுத்து விட்டு நேற்று மாலையில் ஊருக்கு திரும்பினர். அப்போது எதிர்பாராத விதமாக கார் அங்கிருந்த ஒரு பனை மரத்தில் மோதியது. இந்த விபத்தில் 5 பேரும் பலத்த காயமடைந்தனர்.

இதுகுறித்து தகவல் அறிந்த ஆய்க்குடி போலீஸ் இன்ஸ்பெக்டர் வேல்கனி, தனிப்பிரிவு சப்-இன்ஸ்பெக்டர் ராமச்சந்திரன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று காயமடைந்த அனைவரையும் தென்காசி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு முதலுதவி சிகிச்சைக்குப் பிறகு அனைவரும் திருவனந்தபுரத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டனர். விபத்தில் காயமடைந்த சுரேஷ் கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் உள்ள தலைமைச் செயலகத்தில் நிதி அமைச்சரின் செயலாளராக பணியாற்றி வருகிறார்.


Tags:    

மேலும் செய்திகள்