ஊராட்சி மன்ற தலைவர் உள்பட 5 பேருக்கு சிறை

கொலை முயற்சி வழக்கில் ஊராட்சி மன்ற தலைவர் உள்பட 5 பேருக்கு சிறை தண்டனை விதித்து விழுப்புரம் கோர்ட்டில் தீர்ப்பு கூறப்பட்டது.

Update: 2023-03-23 19:04 GMT

திண்டிவனத்தை அடுத்த கீழ்எடையாளம் பகுதியை சேர்ந்தவர் சுதாகர் மனைவி சாந்தா (வயது 23). இவருடைய தரப்புக்கும் அதே பகுதியை சேர்ந்த மனோகரன் தரப்பினருக்கும் தேர்தல் சம்பந்தமாக தகராறு ஏற்பட்டு முன்விரோதம் இருந்து வந்தது. இந்த முன்விரோதம் காரணமாக மனோகரன் மற்றும் அவரது தரப்பை சேர்ந்த பாலு, சரவணன், சதீஷ், முரளி, மணிமாறன், பிரேம், விமல், பரந்தாமன், அன்பு, செந்தில், சத்யராஜ், ஜெயப்பிரகாஷ், பாரதிராஜா, ராமு ஆகிய 15 பேர் சேர்ந்து கடந்த 31.8.2020 அன்று சாந்தாவின் வீட்டிற்குள் புகுந்து அங்கிருந்த அவரது குடும்பத்தினரை தாக்கியதோடு வீட்டில் உள்ள பொருட்களை அடித்து நொறுக்கி சேதப்படுத்தினர். இதுகுறித்து சாந்தா, மயிலம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் மனோகரன் உள்ளிட்ட 15 பேர் மீதும் கொலை முயற்சி பிரிவின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து 15 பேரையும் கைது செய்தனர். இதுதொடர்பான வழக்கு விசாரணை விழுப்புரம் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இந்நிலையில் இவ்வழக்கில் சாட்சிகள் விசாரணை முடிந்த நிலையில் நேற்று தீர்ப்பு கூறப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிபதி பூர்ணிமா, குற்றம் சாட்டப்பட்ட மனோகரன், பாலு, சரவணன், சதீஷ், முரளி ஆகிய 5 பேருக்கும் தலா 3 ஆண்டுகள் சிறை தண்டனையும், தலா ரூ.ஆயிரம் அபராதமும், மற்ற 10 பேருக்கு தலா ரூ.2,500 அபராதமும் விதித்து தீர்ப்பு கூறினார். இவ்வழக்கில் சிறை தண்டனை விதிக்கப்பட்ட மனோகரன் தற்போது கீழ்எடையாளம் ஊராட்சி மன்ற தலைவராக உள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்