கஞ்சா வழக்கில் சிறுவன் உள்பட 5 பேர் கைது
கஞ்சா வழக்கில் சிறுவன் உள்பட 5 பேரை தனிப்படை போலீசார் கைது செய்தனர்.
கஞ்சா விற்பனை
புதுக்கோட்டை மாவட்டத்தில் கஞ்சா மற்றும் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனையை தடுக்க போலீஸ் சூப்பிரண்டு வந்திதா பாண்டே உத்தரவின் பேரில் தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. இந்த தனிப்படையினர் மாவட்டம் முழுவதும் அதிரடி நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இந்த நிலையில் புதுக்கோட்டை நகரப்பகுதியில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட தஞ்சாவூர் மாவட்டத்தை சேர்ந்த கார்த்திக் (வயது 27), கபில்ராஜ் (20), புதுக்கோட்டையை சோ்ந்த 17 வயது சிறுவன் ஆகிய 3 பேரையும் தனிப்படை போலீசார் கைது செய்து புதுக்கோட்டை நகர போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். மேலும் இவர்களிடம் இருந்து 1 கிலோ கஞ்சா, ஒரு தராசு, 4 செல்போன்கள், மோட்டார் சைக்கிள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.
போலீசில் ஒப்படைப்பு
இதேபோல் அரிமளம் அருகே ராயவரத்தில் விற்பனைக்காக கஞ்சா வைத்திருந்த ஹரிஹரன் (24), வயலோகத்தை சேர்ந்த ராம விக்னேஸ்வரன் (22) ஆகியோரை போலீசார் கைது செய்தனர். மேலும் இவர்களிடம் இருந்து ½ கிலோ கஞ்சா, 2 செல்போன்கள், 2 மோட்டார் சைக்கிள்களை கைப்பற்றி அரிமளம் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர்.