சிறுவன் கொலை வழக்கில் 5 பேர் கைது

சிறுவன் கொலை வழக்கில் 5 பேர் கைது செய்யப்பட்டனர்.

Update: 2023-03-14 19:02 GMT

மது பாட்டிலால் குத்திக்கொலை

பெரம்பலூர் இந்திரா நகரை சேர்ந்தவர் கணேசன். இவரது மகன் ரோஹித் ராஜ்(வயது 14). இவனை கடந்த 12-ந்தேதி இரவு அதே பகுதியில் உள்ள கழிப்பிடத்தில் வைத்து மர்ம கும்பல் ஒன்று மது பாட்டிலால் குத்தி கொலை செய்துவிட்டு தப்பியோடியது. இது தொடர்பாக பெரம்பலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து, விசாரணை நடத்தி அந்த மர்ம கும்பலை வலைவீசி தேடி வந்தனர்.

இந்த நிலையில் ரோஹித் ராஜ் கொலை வழக்கு தொடர்பாக பெரம்பலூர் இந்திரா நகரை சேர்ந்த முருகேசனின் வளர்ப்பு மகனான சீனி என்ற சீனிவாசன் (22), திருநகரை சேர்ந்த விஸ்வநாதன் மகன் அய்யனார் (23) மற்றும் 17 வயதுடைய 3 சிறுவர்கள் உள்ளிட்ட 5 பேரை போலீசார் பிடித்து விசாரணை நடத்தினர். இதில் பரபரப்பு தகவல்கள் தெரியவந்தது.

நண்பர்கள்

அதாவது, கொலை செய்யப்பட்ட ரோஹித் ராஜும், கைதான 5 பேரும் நண்பர்கள் ஆவார்கள். அவர்கள், ரோஹித் ராஜுக்கு கஞ்சா புகைக்க பழக்கி விட்டுள்ளனர். போலீசாரின் கெடுபிடிகளால் சரிவர கஞ்சா கிடைக்காததால், இருக்கின்ற கஞ்சாவை ஓரிடத்தில் மறைத்து வைத்திருந்தனர். அந்த இடம் ரோஹித் ராஜுக்கும் தெரியும். பின்னர் 5 பேரும் அந்த இடத்திற்கு சென்று பார்த்தபோது அங்கிருந்த கஞ்சா காணாமல் போயிருந்தது. இது குறித்து அவர்கள் ரோஹித் ராஜுடம் கேட்டபோது, தன்னை மிரட்டினால் போலீசுக்கு தகவல் கூறி விடுவதாக கூறியுள்ளாா். இதனால் ஆத்திரமடைந்த 5 பேரும் சேர்ந்து ரோஹித் ராஜை கொலை செய்தது விசாரணையில் தெரியவந்ததாக போலீசார் தெரிவித்தனர்.

2 பேருக்கு வலைவீச்சு

பின்னர் சீனிவாசன், அய்யனார் மற்றும் 3 சிறுவர்களை கைது செய்த போலீசார், அவர்களை பெரம்பலூர் ஜுடிசியல் மாஜிஸ்திரேட்டு எண்-1 கோர்ட்டில் நீதிபதி முன்பு ஆஜர்படுத்தினர். பின்னர் சீனிவாசன், அய்யனார் ஆகியோரை திருச்சி மத்திய சிறையிலும், 3 சிறுவர்களை இளஞ்சிறார் கூர்நோக்கு இல்லத்திலும் போலீசார் அடைத்தனர். மேலும் இந்த கொலை வழக்கு தொடர்பாக எலி என்ற ராகுல், ரஞ்சித் ஆகிய 2 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்