கூட்டு கொள்ளையில் ஈடுபட சதித்திட்டம் தீட்டிய 5 பேர் கைது
திருவண்ணாமலையில் கூட்டு கொள்ளையில் ஈடுபட சதித்திட்டம் தீட்டிய 5 பேர் கைது செய்யப்பட்டனர்.
திருவண்ணாமலை கிழக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் குணசேகரன் தலைமையிலான போலீசார் திருக்கோவிலூர் சாலையில் இன்று காலை ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
அப்போது திருக்கோவிலூர் சாலை ரெயில்வே மேம்பாலத்தின் அருகில் உள்ள முட்புதரிடம் சந்தேகப்படும் வகையில் 5 பேர் அமர்ந்து பேசி கொண்டிருந்தனர். பின்னர் அவர்களை போலீசார் சுற்றி வளைத்து பிடித்தனர்.
தொடர்ந்து அவர்களிடம் போலீசார் நடத்திய விசாரணையில் திருவண்ணாமலை பல்லவன் நகரை சேர்ந்த ராஜகோபால் (வயது 32), தீபராஜ் (30), சோ. கீழ்நாச்சிப்பட்டு அன்னை ராமபாய் நகரை சேர்ந்த பாரத்குமார் (25), ராஜாஜி நகர் பகுதியை சேர்ந்த மாதேஸ்வரன் (25), அம்பேத்கர் தெருவை சேர்ந்த கிஷோர்குமார் (31) ஆகியோர் என்பது தெரியவந்தது.
மேலும் அவர்கள் பைபாஸ் சாலை வழியாக வருவர்களை வழிமறித்து பணம், நகைகளை கொள்ளை அடிக்க சதித் திட்டம் தீட்டியது தெரியவந்தது.
இதையடுத்து அவர்கள் 5 பேரையும் போலீசார் கைது செய்தனர். மேலும் அவா்களிடம் இருந்து 2 கத்தியையும் பறிமுதல் செய்தனர்.