சென்னை ஐகோர்ட்டில் 5 புதிய நீதிபதிகள் பதவி ஏற்பு

ஐகோர்ட்டு புதிய நீதிபதிகள் 5 பேர் நேற்று பதவி ஏற்றுக்கொண்டனர். அவர்களுக்கு பொறுப்பு தலைமை நீதிபதி டி.ராஜா பதவி பிரமாணம் செய்து வைத்தார்.

Update: 2023-02-08 00:12 GMT

சென்னை,

சென்னை ஐகோர்ட்டுக்கு புதிய நீதிபதிகளாக வக்கீல்கள் எல்.சி.விக்டோரியா கவுரி, பி.பி.பாலாஜி, கே.கே.ராமகிருஷ்ணன், மாவட்ட முதன்மை நீதிபதிகள் ஆர்.கலைமதி, கே.ஜி.திலகவதி ஆகியோரை நியமித்து ஜனாதிபதி உத்தரவிட்டு உள்ளார்.

இதன்படி, சென்னை ஐகோர்ட்டு நீதிபதிகளாக 5 பேரும் நேற்று காலை பதவி ஏற்றுக்கொண்டனர். இவர்களுக்கு பொறுப்பு தலைமை நீதிபதி டி.ராஜா பதவி பிரமாணம் செய்து வைத்தார்.

புதிய நீதிபதிகளை வரவேற்று அட்வகேட் ஜெனரல் ஆர்.சண்முகசுந்தரம், பார் கவுன்சில் தலைவர் பி.எஸ்.அமல்ராஜ், மெட்ராஸ் பார் அசோசியேஷன் தலைவர் கமலநாதன், லா அசோசியேசன் தலைவர் எல்.செங்குட்டுவன், பெண் வக்கீல் சங்கத்தின் நூலகர் வக்கீல் துளசி ஆகியோர் பேசினர்.

நீதிபதி விக்டோரியா கவுரி

இதற்கு நன்றி தெரிவித்து புதிய நீதிபதிகள் 5 பேரும் பேசினார்கள். அப்போது நீதிபதி எல்.சி.விக்டோரியா கவுரி பேசியதாவது:-

லலிதாம்பிகா அம்மன், அன்னை அமிர்தானந்தமயி அருளால், என் பெற்றோரின் ஆசீர்வாதத்தினால் பாரம்பரியமிக்க இந்த ஐகோர்ட்டின் நீதிபதியாக பொறுப்பு ஏற்று உள்ளேன். கன்னியாகுமரி மாவட்டம் மேற்கு நெய்யூர் என்ற குக்கிராமத்தில் சாதாரண குடும்பத்தில் பிறந்த என் மீது நம்பிக்கை வைத்து இப்பதவிக்கு பரிந்துரைத்த ஐகோர்ட்டு முன்னாள் தலைமை நீதிபதி முனீஸ்வர்நாத் பண்டாரி, முன்னாள் பொறுப்பு தலைமை நீதிபதி எம்.துரைசாமி, ஐகோர்ட்டு பொறுப்பு தலைமை நீதிபதி டி.ராஜா மற்றும் சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகளுக்கு என் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.

என்னை படிக்க வைத்த பெற்றோர் லட்சுமண சந்திரா, சரோஜினி சந்திரா, வக்கீல் தொழில் தொடர்ந்து பணியாற்ற உதவியாக இருந்த மாமனார் தங்கமணி ஆகியோருக்கும், ஐகோர்ட்டு ஓய்வுபெற்ற நீதிபதி என்.கிருபாகரனுக்கும் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.

சகோதரத்துவம்

எந்த ஒரு தடையும் இல்லாமல் ஓடும் நதியை போல, என் வாழ்க்கையில் எல்லா தருணங்களும் எனக்கு உறுதுணையாக இருந்த என் கணவர் துளசிமுத்துராம், மகள்கள் டாக்டர் வசந்தபாரதி, சூர்ய காயத்ரி ஆகியோருக்கும் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.

இந்தியாவில் லட்சக்கணக்கான ஏழைகள் பசியுடனும், சமுதாயத்தில் புறக்கணிக்கப்பட்டும் உள்ளனர். அவர்களை மேம்படுத்த வேண்டும் என்று விவேகானந்தர் கூறினார். அதன்படி, நாட்டில் உள்ள பல்வேறு தரப்பினரையும் ஒரேவிதமாக கருதி, சகோதரத்துவத்தை பேணி பாதுகாக்க வேண்டும். ஜெய்ஹிந்த்.

இவ்வாறு அவர் பேசினார்.

புனிதமான பதவி

இவரை தொடர்ந்து பேசிய நீதிபதி பி.பி.பாலாஜி, "நாணயத்தின் இரு பக்கங்கள் என்று நீதிபதிகளையும், வக்கீல்களையும் கூறுவார்கள். இந்த கருத்தில் இருந்து நான் மாறுபடுகிறேன். இரு பக்கம் என்றால் ஒன்றை ஒன்று பார்க்க முடியாது. ஆனால், வழக்கு விசாரணையின்போது நீதிபதிகளும், வக்கீல்களும் தினமும் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொள்கிறோம். எனவே, பல்வேறு வழக்குகளின் தீர்ப்புகள் உள்ளிட்ட விவரங்களுடன் வாதிடும் வக்கீல்கள் என்பவர்கள் கம்ப்யூட்டரில் உள்ள 'இன்புட் டிவைஸ்' போலவும், அதை பரிசீலித்து தீர்ப்பு வழங்கும் நீதிபதிகள் 'அவுட்புட் டிவைஸ்' என்றும் உருவகம் செய்துகொள்ள வேண்டும்.

ஒரு புனிதமான பதவி எனக்கு கிடைத்துள்ளது. அதை பொறுப்புடன் மேற்கொள்வேன்'' என்று கூறினார்.

நீதிபதி எம்.எம்.சுந்தரேஷ்

நீதிபதி கே.கே.ராமகிருஷ்ணன் பேசும்போது, "அன்னை தமிழுக்கு முதல் வணக்கம். நான் ஏழை விவசாயக்கூலி குடும்பத்தை சேர்ந்தவன். கல்விக்கற்க பலர் எனக்கு உதவியாக இருந்தனர். இந்த பதவி கிடைக்க காரணமான என் மூத்த வக்கீல் வி.கே.முத்துசாமி, சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் வி.ராமசுப்பிரமணியன், எம்.எம்.சுந்தரேஷ், முன்னாள் நீதிபதி வி.பாரதிதாசன் உள்ளிட்ட அனைவருக்கும் என் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்'' என்று கூறினார்.

நேர்மை

நீதிபதி ஆர்.கலைமதி, "என்னை ஐகோர்ட்டு நீதிபதியாக நியமித்த அனைத்து நீதிபதிகளுக்கும், என் பெற்றோர் ராமச்சந்திரன், அனுசியா, என் கணவர் டாக்டர் ரவிக்குமார், எனக்கு பாடம் சொல்லி கொடுத்த பேராசிரியர்களுக்கும் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். அரசியல் அமைப்பு சட்டத்தின்படி என் பணியை நேர்மையாகவும், திறமையாகவும் மேற்கொள்வேன் எனறு உறுதி அளிக்கிறேன்'' என்று பேசினார்.

நீதிபதி கே.ஜி.திலகவதி, "என் பெற்றோர், சுப்ரீம் கோர்ட்டு, ஐகோர்ட்டு நீதிபதிகள், என் கணவர் கார்த்திக், மகன் டாக்டர் சித்தார்த், மகள் டாக்டர் ஸ்வேதா உள்ளிட்ட அனைவருக்கும் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்'' என்று கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்