கோவையில் 5 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு
ஜனாதிபதி திரவுபதி முர்மு இன்று (சனிக்கிழமை) வருவதை யொட்டி கோவையில் 5 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப் பட்டு உள்ளது. டிரோன்கள் பறக்க தடை விதிக்கப்பட்டு உள்ளது.
ஜனாதிபதி திரவுபதி முர்மு இன்று (சனிக்கிழமை) வருவதை யொட்டி கோவையில் 5 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப் பட்டு உள்ளது. டிரோன்கள் பறக்க தடை விதிக்கப்பட்டு உள்ளது.
ஜனாதிபதி கோவை வருகை
ஜனாதிபதியாக பதவியேற்ற பிறகு திரவுபதி முர்மு 2 நாள் பயணமாக தமிழகத்துக்கு வருகிறார். இதற்காக அவர் இன்று (சனிக்கிழமை) டெல்லியில் இருந்து தனி விமானம் மூலம் காலை 11.45 மணிக்கு மதுரை விமானநிலையம் வருகிறார். பின்னர் அவர், மீனாட்சியம்மன் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்கிறார்.
இதையடுத்து தனி விமானத்தில் மாலை 3.10 மணியளவில் கோவை விமான நிலையம் வந்தடைகிறார். அங்கு அவருக்கு தமிழக அரசு சார்பில் வரவேற்பு அளிக்கப்படுகிறது.
பின்னர் அவர் குண்டுதுளைக்காத பிரத்யேக காரில் புறப்பட்டு ரேஸ்கோர்சில் உள்ள அரசு விருந்தினர் மாளிகைக்கு வருகிறார். அங்கு சிறிது நேரம் ஓய்வு எடுக்கிறார்.
மகா சிவராத்திரி விழா
இதைத்தொடர்ந்து கோவை ஈஷா யோகா மையத்தில் நடக்கும் மகா சிவராத்திரி விழாவில் தலைமை விருந்தினராக ஜனாதிபதி திரவுபதி முர்மு பங்கேற்கிறார். இதற்காக அங்கு மாலை 5.45 மணியளவில் சென்று தியானலிங்கம், யோகேஸ்வர லிங்கத்தை வழிபாடு செய்கிறார். பின்னர் அவர், இரவு 7.30 மணிக்கு காரில் புறப்பட்டு ரேஸ்கோர்ஸ் அரசு விருந்தினர் மாளிகைக்கு வந்து உணவு அருந்திவிட்டு இரவு தங்குகிறார்.
வெலிங்டன் ராணுவ பயிற்சி கல்லூரி
அவர் மறுநாள் (19-ந் தேதி) காலை 9 மணிக்கு கோவை விமான நிலையத்தில் இருந்து நீலகிரி மாவட்டம் குன்னூர் வெலிங்டன் ராணுவ மையத்துக்கு ஹெலிகாப்டரில் செல்கிறார். அங்கு போர் நினைவுச்சின்னத்தில் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்துகிறார். நண்பகல் 12 மணியளவில் மீண்டும் ஹெலிகாப் டர் மூலம் புறப்பட்டு கோவை விமானநிலையம் வந்தடைகிறார். பின்னர் அங்கிருந்து தனி விமானத்தில் டெல்லி புறப்பட்டு செல்கிறார்.
5 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு
ஜனாதிபதி திரவுபதி முர்மு வருகையை முன்னிட்டு கோவை, நீலகிரியில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளன. கோவையில் 5 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது. விமான நிலையம், அரசு விருந்தினர் மாளிகை மற்றும் ஜனாதிபதி செல்லும் பாதைகளிலும் போலீசார் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
கோவை மாநகரில் 1,900 போலீசார், புறநகரில் 3,100 போலீசார் என மாவட்டம் முழுவதும் மொத்தம் 5 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர். இதுதவிர ஈரோடு, திருப்பூர், திண்டுக்கல், தர்மபுரி, சேலம், கிருஷ்ணகிரி உள்ளிட்ட வெளி மாவட்டங்களில் இருந்தும் போலீசார் பாதுகாப்புக்காக வரவழைக்கப்பட்டு உள்ளனர். மேலும் ஜனாதிபதியின் சிறப்பு பாதுகாப்பு பிரிவு அதிகாரிகள் கோவையில் முகாமிட்டு பாது காப்பு ஏற்பாடுகளை பார்வையிட்டனர். அவர்கள் ஜனாதிபதி செல்லும் பாதைகளைஆய்வு செய்தனர்.
டிரோன்கள் பறக்க தடை
ஜனாதிபதி வருகையை முன்னிட்டு கோவையில் இன்றும், நாளையும் டிரோன்கள் பறப்பதற்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது.
பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து நேற்று வெளி மாவட்டங்களில் இருந்து கோவை வந்த போலீஸ் சூப்பிரண்டுகள், துணை கமிஷனர்கள், உதவி கமிஷனர்களுக்கு இடையே ஆலோசனை கூட்டம் கோவை மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் நேற்று மதியம் நடைபெற்றது.
இதில் போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் போலீசாருக்கு பல்வேறு அறிவுரைகளை வழங்கினார். இதுபோல் மாவட்ட சூப்பிரண்டு அலுவலகத்தில் போலீஸ் சூப்பிரண்டு பத்ரிநாராயணன் தலைமையிலும் ஆலோசனை கூட்டம் நடந்தது.
பாதுகாப்பு ஒத்திகை
இதைத்தொடர்ந்து நேற்று மதியம் 2.45 மணியளவில் ஜனாதிபதி வருகையையொட்டி பாதுகாப்பு ஒத்திகை நடைபெற்றது.
இதற்காக கோவை அரசு விருந்தினர் மாளிகையில் இருந்து கோவை விமானநிலையம் சென்று ஜனாதிபதியை காரில் ஈஷா யோகா மையத்துக்கு அழைத்து செல்வது போன்று தத்ரூபமாக ஒத்திகை நடத்தப்பட்டது.
அப்போது அந்த வழித்தடத்தில் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. ஒத்திகையில் ஜனாதிபதி பயணிக்கும் காரின் முன் ஜாமர் கருவி பொருத்திய கார் ஒன்று சென்றது. அதைத்தொடர்ந்து மற்ற கார்கள் சென்றன.
தங்கும் விடுதிகளில் தீவிர சோதனை
ஜனாதிபதி பயணிக்கும் குண்டு துளைக்காத பிரத்யேகமாக தயாரிக்கப்பட்ட கார் டெல்லியில் இருந்து கோவை கொண்டு வரப்பட்டு போலீஸ் பயிற்சி பள்ளி வளாகத்தில் துப்பாக்கி ஏந்திய பலத்த போலீஸ் பாதுகாப்புடன் நிறுத்திவைக்கப்பட்டு உள்ளது.
ஜனாதிபதியுடன் பயணிக்கும் பாதுகாப்பு வாகனங்களும் அங்கு நிறுத்திவைக்கப்பட்டு உள்ளன.
ஜனாதிபதி வருகையை முன்னிட்டு கோவை மாநகர் மற்றும் புறநகரில் உள்ள ஓட்டல்கள், தங்கும் விடுதிகளில் போலீசார் தீவிர சோதனை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் அங்கு தங்கி இருப்பவர்களின் விவரங்களையும் போலீசார் சேகரித்து வருகிறார்கள்.
சந்தேகத்திற்கிடமான நபர்கள் குறித்து உடனடியாக தகவல் கொடுக்க ஓட்டல் மற்றும் தங்கும் விடுதி உரிமையாளர் களை போலீசார் அறிவுறுத்தினர். மேலும் மாநகர் மற்றும் புறநகரில் உள்ள சோதனைச் சாவடிக ளில் வாகன சோதனை தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது.