விவேகானந்தர் மண்டபத்துக்கு 5 மணி நேரம் படகு சேவை நிறுத்தம்
கன்னியாகுமரி கடலில் நீர்மட்டம் தாழ்ந்ததால் விவேகானந்தர் மண்டபத்துக்கு படகு சேவை நிறுத்தப்பட்டது. இதனால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைந்தனர்.
கன்னியாகுமரி கடலில் நீர்மட்டம் தாழ்ந்ததால் விவேகானந்தர் மண்டபத்துக்கு படகு சேவை நிறுத்தப்பட்டது. இதனால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைந்தனர்.
படகு போக்குவரத்து
சுற்றுலாத் தலமான கன்னியாகுமரிக்கு தினமும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வருகிறார்கள். தற்போது அய்யப்ப பக்தர்கள் சீசன் நிலவுவதால் ஏராளமான பக்தர்கள், சுற்றுலா பயணிகள் குவிந்த வண்ணம் உள்ளனர். இவர்கள் முக்கடல் சங்கமத்தில் புனித நீராடி, பகவதி அம்மன் கோவிலில் சாமி தரிசனம் செய்கிறார்கள்.
இங்கு வரும் சுற்றுலா பயணிகள் கடலின் நடுவே அமைந்துள்ள விவேகானந்தர் நினைவு மண்டபத்ைத படகில் சென்று பார்த்துவிட்டு திரும்புவது வழக்கம். இதற்காக பூம்புகார் கப்பல் போக்குவரத்துக் கழகம் சார்பில் தினமும் காலை 8 மணி முதல் மாலை 4 மணி வரை படகுகள் இயக்கப்பட்டு வருகிறது.
5 மணி நேரம் நிறுத்தம்
இந்தநிலையில் கன்னியாகுமரி கடலில் நேற்று காலையில் பலத்த சூறைக்காற்று வீசியது. அத்துடன் நீர்மட்டமும் தாழ்ந்து காணப்பட்டது. இதனால் காலை 8 மணிக்கு தொடங்க வேண்டிய படகு போக்குவரத்து இயக்கப்படவில்லை. எனவே படகு துறையில் நீண்ட வரிசையில் காத்திருந்த சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைந்தனர்.
தொடர்ந்து மதியம் 1 மணியளவில் கடல் இயல்பு நிலைக்கு திரும்பியது. இதையடுத்து 5 மணி நேரம் தாமதமாக படகு சேவை தொடங்கியது. அதன்பிறகு படகில் ஏறி சுற்றுலா பயணிகள் சென்றனர்.