எஜமானுக்காக உயிரைவிட்ட 5 நாய்கள்: காப்பாற்ற நினைத்த எஜமானும் பலி - நெஞ்சை உலுக்கும் சம்பவம்

மதுரை அருகே, எஜமானரைக் காப்பாற்ற முயன்றபோது, மின்வேலியில் சிக்கி 5 நாய்கள் உயிரிழந்த நிலையில், இளைஞரும் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Update: 2022-11-13 09:30 GMT

மதுரை,

அலங்காநல்லூர் அருகே புதுப்பட்டி பகுதியை சேர்ந்த மாணிக்கம் என்பவர், அப்பகுதியில் காட்டுப்பன்றி வேட்டைக்கு சென்று வருவது வழக்கம் என கூறப்படுகிறது. நாய்கள் மீது அலாதி பிரியம் கொண்ட அவர், 5 நாய்களை வளர்த்து வந்துள்ளார். அந்த நாய்களை, தான் வேட்டைக்கு செல்லும் போதெல்லாம் துணைக்கு அழைத்துச் சென்றுள்ளார்.

இந்த நிலையில், கொண்டையம்பட்டி எனும் பகுதியில், இரவு நேரத்தில் காட்டுப் பன்றி வேட்டைக்கு மாணிக்கம் சென்றுள்ளார். அப்போது, அசோக்குமார் என்பவருக்கு சொந்தமான பூந்தோட்டத்தில், சட்டவிரோதமாக மின்வேலி அமைத்திருந்ததாக கூறப்படுகிறது.

அந்த மின்வேலியை கண்ட நாய்கள், எஜமானரைக் காப்பாற்ற நினைத்து, மின்வேலியை மிதித்து ஒவ்வொன்றாக துடிதுடித்து இறந்துள்ளன. அப்போது நாய்களைக் காப்பாற்ற முயன்ற மாணிக்கமும், மின்சாரம் தாக்கியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வரும் நிலையில், தோட்டத்தில் மின்வேலி அமைத்த அசோக்குமாரை போலீசார் தேடி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்