5 நாள் போராட்டம் முடிவுக்கு வந்தது: கொலையான தொழிலாளியின் உடலை பெற்றுக்கொள்ள உறவினர்கள் சம்மதம்
சபாநாயகர் நடத்திய பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதை ெதாடர்ந்து, கொலையான தொழிலாளியின் உடலை பெற்றுக்கொள்ள உறவினர்கள் சம்மதம் தெரிவித்தனர். இதனால் 5 நாள் போராட்டம் முடிவுக்கு வந்தது.
சபாநாயகர் நடத்திய பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதை ெதாடர்ந்து, கொலையான தொழிலாளியின் உடலை பெற்றுக்கொள்ள உறவினர்கள் சம்மதம் தெரிவித்தனர். இதனால் 5 நாள் போராட்டம் முடிவுக்கு வந்தது.
தொழிலாளி கொலை
நெல்லை பாளையங்கோட்டை அருகே உள்ள சீவலப்பேரி கோனார் தெருவை சேர்ந்தவர் சங்கரலிங்கம் மகன் மாயாண்டி (வயது 38). தொழிலாளி. இவரை கடந்த 10-ந்தேதி மர்மகும்பல் வெட்டி கொலை செய்தது. இந்த சம்பவம் குறித்து சீவலப்பேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து 13 பேரை கைது செய்தனர். இதே போல் கடந்த ஆண்டு கோவில் பூசாரி ஒருவர் வெட்டி கொலை செய்யப்பட்டார். அவரின் மனைவிக்கும், மாயாண்டியின் மனைவிக்கும் அரசு வேலை வழங்க கோரி கடந்த 4 நாட்களாக மாயாண்டியின் உடலை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
நேற்றும் அவர்கள் மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு வருவதாக தகவல் வெளியானது. இதனால் மாவட்ட கலெக்டர் அலுவலகம் பகுதியில் 200-க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டனர். ஆனால் அங்கு அவர்கள் வரவில்லை.
கடைகள் அடைப்பு
இதற்கிடையே பாளையங்கோட்டை தெற்கு பஜார் பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள், வியாபாரிகள் என நூற்றுக்கணக்கானவர்கள் ராஜகோபாலசுவாமி கோவில் முன்பு திரண்டு லூர்துநாதன் சிலைக்கு ஊர்வலமாக வந்தனர். இதனை அறிந்த மாநகர போலீஸ் கமிஷனர் அவினாஷ்குமார், துணை போலீஸ் கமிஷனர் சீனிவாசன் மற்றும் போலீசார் அங்கு சென்று பேச்சுவார்த்தை நடத்தினர். இதையடுத்து அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.
அதே வேளையில் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து அந்த பகுதி வியாபாரிகள் தங்கள் கடைகளை அடைத்து இருந்தனர். முன்னதாக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பாளையங்கோட்டையை சேர்ந்த வேணுகோபால், ரமேஷ், செல்வம், ஊய்க்காட்டான், சுடலை உள்ளிட்ட 6 பேரை பாளையங்கோட்டை போலீசார் கைது செய்தனர்.
பேச்சுவார்த்தை
இதனையடுத்து நேற்று மதியம் மாவட்ட சுற்றுலா மாளிகையில் வைத்து சபாநாயகர் அப்பாவு, மாயாண்டியின் குடும்பத்தினர், உறவினர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். இந்த பேச்சுவார்த்தையில் யாதவ மகாசபை மாநில இளைஞர் அணி பொதுச்செயலாளர் பொட்டல்துரை உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.
அப்போது மாயாண்டி குடும்பத்தினருக்கு ரூ.5 லட்சம் நிதியுதவி வழங்கப்பட்டது. 2 மணி நேரம் நடந்த இந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதையடுத்து மாயாண்டியின் உடலை பெற்றுக் கொள்ள உறவினர்கள் சம்மதம் தெரிவித்தனர்.
அரசு வேலை
பின்னர் சபாநாயகர் அப்பாவு கூறியதாவது:-
கொலை செய்யப்பட்ட மாயாண்டி குடும்பத்தினர் பல்வேறு கோரிக்கைகளை வைத்தனர். அதில் மாயாண்டி மனைவிக்கும், ஏற்கனவே கோவில் பிரச்சினையில் கொலை செய்யப்பட்ட பூசாரி சிதம்பரத்தின் மனைவிக்கும் அரசு வேலை வழங்க வேண்டும் என்று கேட்டனர். அதை ஏற்று அங்கன்வாடி, சத்துணவு அல்லது கிராமஉதவியாளர், ரேஷன் கடை பணியாளர் உள்ளிட்ட வேலை வழங்குவதற்கான ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. இதுகுறித்து முதல்-அமைச்சருக்கு தெரிவித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும். வருகிற டிசம்பர் 31-ந் தேதிக்குள் அவர்கள் இருவருக்கும் அரசு சார்பில் வேலை வழங்கப்படும் என உறுதி அளிக்கப்பட்டு உள்ளது.
சீவலப்பேரியில் சுடலை கோவிலில் நிலத்தை அளந்து அந்த பகுதியில் வேலி போட வேண்டும் என கேட்டுக்கொண்டனர். உடனடியாக அதற்கும் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. அந்த பகுதியில் உள்ள புறக்காவல் நிலையத்தில் கூடுதல் போலீசார் பணியமர்த்தப்படுவர். அந்த பகுதியில் கண்காணிப்பு கேமரா பொருத்தவும் நடவடிக்கை எடுக்கப்படுகிறது. எந்தவிதமான அசம்பாவித சம்பவங்கள் நடைபெறாமல் அனைவரும் ஒற்றுமையாக வாழ உரிய நடவடிக்கை எடுக்கப்படும். இந்த பேச்சுவார்த்தையை தொடர்ந்து மாயாண்டி உடலை உறவினர்கள் நாளை (அதாவது இன்று) பெற்றுக் கொள்வதாக உறுதியளித்து உள்ளனர்.
இவ்வாறு அவர் கூறினார்.
யாதவ மகாசபை மாநில இளைஞரணி பொதுச்செயலாளர் பொட்டல் துரை கூறும்போது, 'கொலை செய்யப்பட்ட மாயாண்டி மற்றும் சிதம்பரம் ஆகியோரின் மனைவிகளுக்கு அரசு வேலை மற்றும் இலவச வீட்டுமனை பட்டா, நிவாரண உதவி உள்ளிட்ட எங்களது கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் என்று சபாநாயகர் கூறியுள்ளார். அதை ஏற்று மாயாண்டி உடலை பெற்றுக்கொள்வோம்' என்றார்.
இதையடுத்து கடந்த 5 நாளாக நடந்து வந்த போராட்டம் முடிவுக்கு வந்துள்ளது.