ரூ.5 கோடியில் சாகச சுற்றுலா

ஊட்டி படகு இல்லத்தில் ரூ.5 கோடியில் சாகச சுற்றுலா விளையாட்டுகள் ஏற்படுத்தப்படுகிறது என அமைச்சர் மதிவேந்தன் தெரிவித்தார்.

Update: 2022-12-12 18:45 GMT

ஊட்டி, 

ஊட்டி படகு இல்லத்தில் ரூ.5 கோடியில் சாகச சுற்றுலா விளையாட்டுகள் ஏற்படுத்தப்படுகிறது என அமைச்சர் மதிவேந்தன் தெரிவித்தார்.

சாகச விளையாட்டுகள்

நீலகிரி மாவட்டம் ஊட்டி படகு இல்லம் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகத்தின்‌ கீழ்‌ செயல்படுகிறது. இங்கு இழைவரிக்‌ கோடு, மாபெரும்‌ ஊஞ்சல், ரோலர்‌ கோஸ்டர்‌, பங்கீ ஜம்பிங்‌, தொங்கு பாலம்‌ உள்பட பல்வேறு சாகச விளையாட்டுகள் கொண்ட சுற்றுலா அறிமுகப்படுத்தப்பட உள்ளது. இதற்கான பூமி பூஜை நேற்று படகு இல்லத்தில்‌ நடைபெற்றது. இதில் சுற்றுலாத்‌துறை அமைச்சர் மதிவேந்தன், வனத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் ஆகியோர் கலந்துகொண்டு பணிகளை தொடங்கி வைத்தனர். அதன் பின்னர் அமைச்சர் மதிவேந்தன் கூறியதாவது:-

தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகம் சார்பில், ஊட்டி படகு இல்லத்தில் முதல் முறையாக சாகச விளையாட்டுகள் அறிமுகப்படுத்தப்படுகிறது. சுற்றுலா பயணிகளிடம் சாகச விளையாட்டுகள் அதிக வரவேற்பை பெற்றுள்ளது. சாகச சுற்றுலாவுக்கான விதிமுறைகளை தமிழக அரசு வெளியிட்டது.

பாதுகாப்பு முக்கியம்

இத்திட்டத்தின் கீழ் ஆண்டுதோறும் 10 முதல் 15 இடங்களை தேர்வு செய்து, அரசிடம் நிதி பெற்று செயல்படுத்தப்பட உள்ளது. இதில் கொல்லிமலை, ஜவ்வாது மலை, ஏலகிரி உள்ளிட்ட சில இடங்களில் தனியார் பங்களிப்பிற்கும் அனுமதி உண்டு. அவ்வாறு தனியார் பங்களிப்புக்கு அனுமதி அளிக்கப்பட்ட 5 இடங்களில் ஊட்டி படகு இல்லமும் ஒன்றாகும். இதற்காக ரூ.5 கோடி மதிப்பில் சாகச சுற்றுலா வசதி ஏற்படுத்தப்படுகிறது. 6 மாதங்களில் பணிகளை முடிக்க திட்டமிடப்பட்டு உள்ளது. இதேபோல் ஊட்டி படகு இல்லத்தில் ரூ.3 கோடி மதிப்பில் 3 ஏக்கரில் இயற்கை சூழல் அமைந்த வனப்பகுதியில் சுற்றுலா பயணிகள் டெண்ட் அமைத்து தங்கும் வகையில் கேம்பிங் திட்டம் செயல்படுத்த உள்ளோம். இந்த சாகச விளையாட்டுகளில் சுற்றுலா பயணிகளின் பாதுகாப்புக்கு அதிக முக்கியத்துவம் தரப்படும். எதிர்காலத்தில் படகு இல்ல குளங்களில் படகு வீடு திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. இவ்வாறு அவர் கூறினார். நிகழ்ச்சியில் சுற்றுலா துறை ஆணையாளர் சந்தீப் நந்தூரி, மண்டல மேலாளர் வெங்கடேஷ், படகு இல்ல மேலாளர் சாலமோன் மற்றும் பலர் கலந்துகொண்டனர். 

Tags:    

மேலும் செய்திகள்