டிசம்பர் மாதத்துக்குள் 4-வது குடிநீர் திட்டம் பயன்பாட்டுக்கு வரும்

டிசம்பர் மாதத்துக்குள் திருப்பூர் மாநகராட்சியின் 4-வது குடிநீர் திட்டம் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு வரும் என்று தமிழ்வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் கூறினார்.

Update: 2023-10-07 17:27 GMT

டிசம்பர் மாதத்துக்குள் திருப்பூர் மாநகராட்சியின் 4-வது குடிநீர் திட்டம் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு வரும் என்று தமிழ்வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் கூறினார்.

4-வது புதிய குடிநீர் திட்டம்

திருப்பூர் மாநகராட்சியின் 4-வது புதிய குடிநீர் திட்டத்தில் ரூ.1,120 கோடியே 57 லட்சம் மதிப்பில் கோவை மாவட்டம் மேட்டுப்பாளைத்தில் நீரேற்று நிலையம் அமைக்கப்பட்டு பணிகள் நடக்கிறது. இந்த பணியை தமிழ்வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் நேற்று ஆய்வு செய்தார். திருப்பூர் மாவட்ட கலெக்டர் கிறிஸ்துராஜ் தலைமை தாங்கினார். மேயர் தினேஷ்குமார், ஆணையாளர் பவன்குமார் கிரியப்பனவர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இந்த திட்டத்தில் 1 நீரேற்று நிலையம், 1 குடிநீர் சுத்திகரிப்பு நிலையம், 144 கிலோ மீட்டர் நீளத்தில் குடிநீர் குழாய்கள் பதிக்கப்பட்டுள்ளது. புதிதாக 29 மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகள் அமைக்கப்படுகிறது. அதில் 21 தொட்டிகள் பணி முடிவுற்று நீரேற்றம் செய்யப்பட்டுள்ளது. மீதம் உள்ள 8 தொட்டிகளில் பணிகள் நடந்து வருகிறது.

டிசம்பர் மாதம்

67 ஆயிரம் வீட்டு இணைப்புகள் புதிதாக வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டு அதில் 63 ஆயிரத்து 727 இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளது. 24 மணி நேரமும் குடிநீர் வினியோகம் செய்யும் குழாய்கள் 11½ கிலோ மீட்டர் தூரம் பதிக்கப்பட்டுள்ளது. இன்னும் 46 கிலோ மீட்டர் தூரம் குழாய் பதிக்க வேண்டியுள்ளது. தினமும் 60 முதல் 70 எம்.எல்.டி. அளவு குடிநீர் சுத்திகரிப்பு செய்யப்பட்டு 51 மேல்நிலைத்தொட்டிகளில் நீரேற்றம் செய்யப்பட்டு சோதனை ஓட்டம் நடைபெற்று வருகிறது.

வரும் டிசம்பர் மாதத்துக்குள் பணிகள் முடிந்து பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வர விரைவாக பணிகள் நடக்கிறது. இந்த திட்டம் 30 ஆண்டு காலத்துக்கு பயன்படும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது என்று அமைச்சர் மு.பெ.சாமிநாதன் தெரிவித்தார்.

சுத்திகரிப்பு நிலையம்

இதைத்தொடர்ந்து அன்னூர் தாலுகா ஒட்டர்பாளையத்தில் 4-வது குடிநீர் திட்டத்தின் சுத்திகரிப்பு நிலையத்தை அமைச்சர் ஆய்வு செய்தார். முன்னதாக நீர்பாசனத்துறையின் சார்பில் பவானிசாகர் வடிநில கோட்டம் ஓடந்துறை கிராமத்தில் பவானி ஆற்றின் குறுக்கே ரூ.24½ கோடி மதிப்பில் தடுப்பணை கட்டும் பணியை அமைச்சர் ஆய்வு செய்தார்.

ஆய்வின்போது துணை மேயர் பாலசுப்பிரமணியம், செயற்பொறியாளர் கண்ணன், இளநிலை பொறியாளர் கோவிந்தபிரபாகர், நீர்ப்பாசனத்துறை செயற்பொறியாளர் அருள்அழகன், உதவி செயற்பொறியாளர் சுப்பிரமணி, உதவி பொறியாளர் ரமேஷ் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.

3 நாட்களுக்கு ஒருமுறை வினியோகம்

ஆய்வு குறித்து அமைச்சர் மு.பெ.சாமிநாதன் நிருபர்களிடம் கூறியதாவது:-

பவானி ஆற்றை நீராதாரமாக கொண்டு திருப்பூர் மாநகராட்சிக்கு 4-வது குடிநீர் திட்டப்பணிகள் இறுதிகட்டத்தை எட்டியுள்ளது. 90 எம்.எல்.டி. அளவு தண்ணீர் தினமும் எடுக்கப்பட்டு வருகிறது. தடுப்பணை பணிகள் முடிந்தபிறகு தினமும் 190 எம்.எல்.டி. அளவு தண்ணீர் திருப்பூர் மாநகராட்சி மக்களுக்கு வழங்கப்படும். முழு அளவில் தண்ணீர் எடுக்கும்போது திருப்பூர் மாநகர மக்களுக்கு 3 நாட்களுக்கு ஒருமுறை குடிநீர் வினியோகம் செய்யமுடியும். ஒருநபருக்கு தினமும் 135 லிட்டர் தண்ணீர் வழங்கும் வகையில் திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது.

மேட்டுப்பாளையம் நகராட்சிக்கு கூடுதல் தண்ணீர் கிடைக்கும் வகையில் தடுப்பணை பணிகள் நடக்கிறது. ரூ.22 கோடியில் புதிய திட்டம் தயாரிக்கப்பட்டு ஒப்புதலுக்கு சென்றுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்