2-வது நாளாக 41 மின்சார ரெயில்கள் ரத்து: மெட்ரோ ரெயில் நிலையத்தில் அலைமோதிய கூட்டம்

தண்டவாள பராமரிப்பு பணி காரணமாக 2-வது நாளாக 41 மின்சார ரெயில்கள் ரத்து செய்யப்பட்டதால் மெட்ரோ ரெயில் நிலையத்தில் பயணிகள் கூட்டம் அலைமோதியது.;

Update: 2023-10-03 10:53 GMT

சென்னை எழும்பூர்-விழுப்புரம் வழித்தடத்தில் தண்டவாள பராமரிப்பு பணி காரணமாக சென்னை கடற்கரை-செங்கல்பட்டு இடையே நேற்று முன்தினம் 22 மின்சார ரெயில்கள் ரத்து செய்யப்பட்டது. முன்னறிவிப்பு இல்லாமல் ரெயில்கள் ரத்து செய்யப்பட்டதால் பயணிகள் அவதிக்குள்ளானார்கள். இந்தநிலையில் 2-வது நாளாக நேற்றும் தண்டவாள பராமரிப்பு பணிக்காக காலை 11 மணி முதல் மதியம் 3.15 மணி வரை 41 மின்சார ரெயில்கள் ரத்து செய்யப்பட்டன. அதிலும் காந்தி ஜெயந்தி அரசு விடுமுறையான நேற்று ஞாயிற்றுக்கிழமை காலஅட்டவணை அடிப்படையில் குறைந்த அளவு மின்சார ரெயில்களே இயக்கப்பட்டதால் பயணிகள் கடும் அவதிக்குள்ளானார்கள்.

எழும்பூர், மாம்பலம், கிண்டி, தாம்பரம் உள்ளிட்ட ரெயில் நிலையங்களில் பயணிகள் கூட்டம் அலைமோதியது. கடற்கரை-செங்கல்பட்டு இடையே இயக்கப்பட்ட மின்சார ரெயில்களில் கூட்டம் நிரம்பி வழிந்தது.

ரெயிலில் கால் வைப்பதற்கு கூட இடமின்றி பயணிகள் ஒருவரை ஒருவர் நெருக்கி அடித்தபடி பயணித்தனர். ரெயில் நிலையங்களில் குவிந்த பயணிகள் ரெயில் வந்ததும் முண்டியடித்து ஏறினர். பலர் ரெயில் படிக்கட்டில் தொங்கியபடி ஆபத்தான முறையில் பயணம் செய்தனர். இதனால் பெண்கள், குழந்தைகள், முதியவர்கள் கடும் சிரமத்துக்குள்ளானார்கள்.

மின்சார ரெயில்கள் ரத்து செய்யப்பட்டதால் மெட்ரோ ரெயில் நிலையங்களிலும், பஸ் நிலையங்களிலும் நேற்று வழக்கத்தைவிட கூட்டம் அதிகமாக இருந்தது. இதுவரை இல்லாத அளவுக்கு மெட்ரோ ரெயில் நிலையங்களில் கூட்டம் அலைமோதியது. டிக்கெட் எடுக்கவே நீண்ட வரிசையில் பயணிகள் காத்திருந்தனர்.

விடுமுறை தினத்தை கொண்டாட குடும்பத்துடன் வெளியே வந்தவர்கள், மின்சார ரெயில்கள் இல்லாததாலும், பஸ் மற்றும் மெட்ரோ ரெயில் நிலையங்களில் கூட்டம் அலைமோதியதாலும் பெரிதும் அவதிக்குள்ளானார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்