தம்மம்பட்டி அருகே ஜங்கமசமுத்திரம் ஏரியில் 40 விநாயகர் சிலைகள் கரைப்பு-450 போலீசார் பாதுகாப்பு

தம்மம்பட்டி அருகே உள்ள ஜங்கமசமுத்திரம் ஏரியில் 40 விநாயகர் சிலைகள் கரைக்கப்பட்டன. 450 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

Update: 2023-09-23 20:29 GMT

கெங்கவல்லி:

விநாயகர் சிலைகள்

சேலம் மாவட்டம் தம்மம்பட்டி சுற்றுவட்டாரம் உலிபுரம், நாகியம்பட்டி, தகரபுத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் சதுர்த்தியையொட்டி 40-க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டு பூஜை, வழிபாடு நடந்தது. இதனை தொடர்ந்து நேற்று தம்மம்பட்டியில் 40 விநாயகர் சிலைகளுக்கும் சிறப்பு பூஜை நடந்தது. பின்னர் மதியம் 2 மணி அளவில் இந்து முன்னணி மாநில செயலாளர் சண்முகம் மற்றும் நிர்வாகிகள், பக்தர்கள் விநாயகர் சிலைகளை வாகனங்களில் வைத்து ஊர்வலமாக கொண்டு சென்றனர்.

இந்த ஊர்வலம் பஸ் நிலையத்தில் தொடங்கி கடைவீதி வழியாக சென்று மாலை 6 மணிக்கு ஜங்கமசமுத்திரம் ஏரிக்கு கொண்டு செல்லப்பட்டது. சாலையில் சென்றபோது வழிநெடுகிலும் நின்ற பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.

போலீஸ் பாதுகாப்பு

இதனை தொடர்ந்து வாகனங்களில் இருந்து கிரேன் எந்திரம் மூலம் சிலைகள் ஏரியில் இறக்கப்பட்டன. அப்போது தீயணைப்புத்துறை நிலைய அலுவலர் செல்லபாண்டியன், வேலுமணி தலைமையில் 15 தீயணைப்பு படை வீரர்கள் ஏரியில் இறங்கி சிலைகளை கரைத்தனர். இவ்வாறு 40 சிலைகளும் கரைக்கப்பட்டன.

சிலை கரைப்பையொட்டி சேலம் சரக டி.ஐ.ஜி. ராஜேஸ்வரி, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அருண் கபிலன், ஆத்தூர் துணை போலீஸ் சூப்பிரண்டு நாகராஜ் தலைமையில் 450 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். ஆத்தூர் உதவி கலெக்டர் ரமேஷ், கெங்கவல்லி தாசில்தார் வெங்கடேசன் தலைமையில் அதிகாரிகளும் வந்திருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்