காரில் கடத்திய 40 மூட்டை ரேஷன் அரிசி பறிமுதல்

தட்டார்மடம் அருகே காரில் கடத்திய 40 மூட்டை ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது.

Update: 2022-12-22 18:45 GMT

தட்டார்மடம்:

தட்டார்மடம் அருகே காரில் கடத்தப்பட்ட 40 மூட்டை ரேஷன் அரிசியை தாசில்தார் தலைமையில் அதிகாரிகள் துரத்தி பிடித்தனர். காரில் இருந்து தப்பி ஓடிய 2 பேரை போலீசார் தேடிவருகின்றனர்.

அதிகாரிகள் வாகன சோதனை

சாத்தான்குளம் பகுதியில் ரேஷன் அரிசி கடத்தப்படுவதாக தாலுகா அலுவலகத்துக்கு தகவல் கிடைத்தது. இதை தொடர்ந்து சாத்தான்குளம் தாசில்தார் தங்கையா தலைமையில் வட்ட வழங்கல் அலுவலர் அகிலா, அரசூர்-2 கிராம நிர்வாக அலுவலர் ஆனந்த் ஆகியோர் நேற்று மாலையில் அரசூர் பகுதியில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரி முன்பு வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

நிற்காமல் சென்ற கார்

அப்போது அந்த சாலையில் வேகமாக வந்த காரை அதிகாரிகள் நிறுத்துமாறு சைகை காட்டினர். ஆனால் அந்த கார் நிற்காமல் அதிவேகமாக அதிகாரிகளை கடந்து சென்றது.

உடனடியாக தாசில்தார் தலைமையிலான அதிகாரிகள் காரில் ஏறி அந்த காரை பின் தொடர்ந்து சென்றனர். ஆனாலும், மர்மநபர்கள் காரை நிறுத்தாமல் தப்பி செல்ல முயற்சித்தனர். கன்னடியான் கால்வாய் பாலம் அருகில் அதிகாரிகளின் காரால், மர்மநபர்கள் சென்ற காரை மோதினர். இதில் நிலைகுலைந்த மர்மநபர்கள் காரை நிறுத்தினர்.

ரேஷன் அரிசி பறிமுதல்

அதிலிருந்து இறங்கிய 2 மர்மநபர்களும் கீழே குதித்து தப்பி ஓடிவிட்டனர். அதிகாரிகள் அந்த காரில் சோதனை நடத்தினர்.

அப்போது அந்த காரில் 50 கிலோ எடை கொண்ட 40 மூட்டைகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதை தொடர்ந்து ரேஷன் அரிசி மூட்டைகளுடன் அந்த காரை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

2 பேருக்கு வலைவீச்சு

பறிமுதல் செய்யப்பட்ட ரேஷன் அரிசி மற்றும் காரை மேல் நடவடிக்கைக்காக தட்டார்மடம் போலீஸ் நிலையத்தில் அதிகாரிகள் ஒப்படைத்தனர். தட்டார்மடம் ேபாலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடிய 2 மர்ம நபர்களை தேடிவருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்