சிம்கார்டுகளை விற்ற 4 வாலிபர்கள் கைது

போலி அடையாள அட்டைகளை பயன்படுத்தி சிம்கார்டுகளை ஆக்டிவேட் செய்து விற்ற 4 வாலிபர்களை வேலூர் சைபர் கிரைம் போலீசார் கைது செய்துள்ளனர்.

Update: 2022-08-27 16:03 GMT

போலி அடையாள அட்டைகளை பயன்படுத்தி சிம்கார்டுகளை ஆக்டிவேட் செய்து விற்ற 4 வாலிபர்களை வேலூர் சைபர் கிரைம் போலீசார் கைது செய்துள்ளனர்.

போலீசார் ரோந்து

வேலூர் சத்துவாச்சாரி போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது 2 பேர் சந்தேகத்துக்கு இடமளிக்கும் வகையில் நின்று கொண்டிருந்தனர்.

அவர்களை போலீசார் பிடித்து விசாரணை நடத்தினர். அதில் அவர்கள் முன்னுக்கு பின் முரணாக பேசினர்.

அவர்களிடம் போலீசார் நடத்திய சோதனையில் 40-க்கும் மேற்பட்ட சிம் கார்டுகள் இருந்தன. இதனால் சந்தேகமடைந்த போலீசார் அவர்கள் இருவரையும் சத்துவாச்சாரி போலீஸ் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர்.

அதில் அவர்கள் வேலூர் கொணவட்டம் மதினாநகரை சேர்ந்த சேக் தஸ்தகீர் (வயது 21), ராணிப்பேட்டை மாவட்டம் மேல்விஷாரத்தை சேர்ந்த இப்ராகீம் (23) என்பது தெரியவந்தது.

அவர்கள் வைத்திருந்த சிம் கார்டுகள் மற்றும் ஆவணங்களை போலீசார் சோதனைக்கு உட்படுத்தியதில், போலி அடையாள அட்டைகளை வைத்து சிம்கார்டுகளை ஆக்டிவேட் செய்தது தெரியவந்தது.

பின்னர் அவர்களிடம் மேல் விசாரணை நடத்தி, சம்பவத்தில் தொடர்புடைய மேல்மொணவூரை சேர்ந்த விஜய் (24), வாலாஜாவை சேர்ந்த அசோக்குமார் (31) ஆகியோரையும் போலீசார் பிடித்தனர்.

கைது

இந்த சம்பவத்தில் தொடர்புடைய இப்ராகீமை தவிர்த்து மற்ற 3 பேரும் செல்போன் நிறுவனங்களில் வேலை பார்த்து வருகின்றனர்.

இவர்கள் போலி அடையாள அட்டைகளை பயன்படுத்தி சிம்கார்டுகளை ஆக்டிவேட் செய்து மற்றவர்களுக்கு விற்றுள்ளனர்.

இது சட்டப்படி குற்றமாகும். இதற்காக அவர்கள் ரூ.2 ஆயிரம் முதல் ரூ.4 ஆயிரம் வரை வாங்கியதாக தெரிகிறது. 4 பேரையும் போலீசார் கைது செய்து, 44 சிம் கார்டுகள் மற்றும் சில எலக்ட்ரானிக் கருவிகளும், போலி அடையாள அட்டைகளை பறிமுதல் செய்தனர்.

இவர்கள் யாருக்கெல்லாம் சிம்கார்டுகளை ஆக்டிவேட் செய்துள்ளனர் என்பது குறித்த பட்டியலை வைத்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்