பிரதமர் மோடி நாளை மறுநாள் வருகை; காந்திகிராம பல்கலைக்கழகத்தில் 4 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு

காந்திகிராம பல்கலைக்கழகத்துக்கு பிரதமர் மோடி நாளை மறுநாள் வருகை தரும் நிலையில், காந்திகிராமத்தில் 4 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர்.

Update: 2022-11-07 18:45 GMT

காந்திகிராம பல்கலைக்கழகத்துக்கு பிரதமர் மோடி நாளை மறுநாள் வருகை தரும் நிலையில், காந்திகிராமத்தில் 4 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர்.

பிரதமர் மோடி வருகை

திண்டுக்கல்லை அடுத்த காந்திகிராமத்தில், காந்திகிராம கிராமிய பல்கலைக்கழகம் உள்ளது. இந்த பல்கலைக்கழகத்தின் 36-வது பட்டமளிப்பு விழா மற்றும் காந்திகிராம நிறுவனத்தின் பவளவிழா நாளை மறுநாள் (வெள்ளிக்கிழமை) மாலை நடைபெற உள்ளது. இந்த விழாவில் பிரதமர் நரேந்திர மோடி கலந்துகொண்டு மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கி, சிறப்புரை ஆற்றுகிறார்.

இதில் தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி, முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், மத்திய மந்திரிகள் தர்மேந்திர பிரதான், எல்.முருகன் ஆகியோரும் கலந்து கொள்கின்றனர். பிரதமர் வருகையையொட்டி கடந்த ஒரு வாரமாக திண்டுக்கல் மாவட்ட கலெக்டர் விசாகன், போலீஸ் சூப்பிரண்டு பாஸ்கரன் மற்றும் வருவாய்த்துறையினர், போலீசார் பல்கலைக்கழகத்தில் முகாமிட்டு விழா ஏற்பாடுகளை பார்வையிட்டு வருகின்றனர்.

ஆலோசனை கூட்டடம்

இந்தநிலையில் நேற்று மத்திய பாதுகாப்பு படையினர் மற்றும் மத்திய அரசுத்துறை அதிகாரிகள் காந்திகிராமம் வந்தனர். அவர்கள் பிரதமர் வந்து இறங்கும் ஹெலிகாப்டர் இறங்குதளம், கார் மூலம் பல்கலைக்கழகம் செல்லும் வழித்தடமான மதுரை-திண்டுக்கல் நான்கு வழிச்சாலை, பட்டமளிப்பு விழா நடைபெறும் அரங்கம் மற்றும் வாகனங்கள் நிறுத்தும் இடம் ஆகியவற்றை பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

பின்னர் பல்கலைக்கழக வளாகத்தில் செய்ய வேண்டிய பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்த ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் கலெக்டர் விசாகன், மத்திய பாதுகாப்பு படையினர், தமிழக போலீஸ் உயர் அதிகாரிகள், காந்திகிராம பல்கலைக்கழக துணை வேந்தர் குர்மித் சிங், பதிவாளர் சிவக்குமார் மற்றும் அதிகாரிகள் கலந்துகொண்டு ஆலோசனை நடத்தினர்.

4 ஆயிரம் போலீசார்

இதற்கிடையே பல்கலைக்கழக வளாகம், ஹெலிபேடு பகுதிகள் இன்று (புதன்கிழமை) முதல் மத்திய பாதுகாப்பு படையினரின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்படுகிறது. இதுதவிர பாதுகாப்பு பணியில் மத்திய பாதுகாப்பு படை போலீசார், தமிழக போலீசார் என சுமார் 4 ஆயிரம் பேர் ஈடுபட உள்ளனர்.

இந்தநிலையில் பட்டமளிப்பு விழாவில் கலந்துகொள்வதற்காக தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கரூரில் இருந்து கார் மூலம் காந்திகிராம பல்கலைக்கழகத்துக்கு வருகிறார்.

இதையொட்டி முதல்-அமைச்சர் வரும் வழித்தடங்கள், அவர் ஓய்வு எடுக்கும் அறை ஆகியவற்றை திண்டுக்கல் கிழக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் இ.பெ.செந்தில்குமார் எம்.எல்.ஏ. நேற்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர் அவர், போலீஸ் சூப்பிரண்டு பாஸ்கரனுடன் ஆலோசனை நடத்தினார்.

தி.மு.க., பா.ஜ.க. சார்பில் வரவேற்பு

இதேபோல் தமிழக பா.ஜ.க. சார்பில், ஹெலிகாப்டர் இறங்குதளம் முதல் காந்திகிராம நுழைவு வாயில் வரை சாலையின் இருபுறமும் நின்று பிரதமர் ேமாடிக்கு சிறப்பான வரவேற்பு கொடுக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

மேலும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினை வரவேற்க தோமையார்புரம் பைபாஸ் சாலை முதல் காந்திகிராமம் நுழைவு வாயில் வரை வழிநெடுகிலும் வரவேற்பு கொடுக்க தி.மு.க.வினர் ஏற்பாடு செய்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்