மாணவ-மாணவிகள் 4 பேருக்கு மருத்துவக்கல்லூரியில் இடம் கிடைத்தது
மாணவ-மாணவிகள் 4 பேருக்கு மருத்துவக்கல்லூரியில் இடம் கிடைத்தது.
45 பேர் தேர்ச்சி
மருத்துவ படிப்புகளில் சேருவதற்காக நாடு முழுவதும் 'நீட்' தேர்வு கடந்த சில ஆண்டுகளாக நடத்தப்பட்டு வருகிறது. கடந்த ஆண்டுக்கான தேர்வு கடந்த ஜூலை மாதம் 17-ந் தேதி நடந்தது. இந்த நிலையில் கடந்த செப்டம்பர் மாதம் 8-ந்தேதி 'நீட்' தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டது.
இதில் பெரம்பலூர் மாவட்டத்தில் அரசு பள்ளியில் பயின்ற 15 மாணவர்களும், 30 மாணவிகளும் என மொத்தம் 45 பேர் 'நீட்' தேர்வில் தேர்ச்சி பெற்று மாவட்டத்திற்கு பெருமை சேர்த்திருந்தனர். கடந்த ஆண்டை விட 26 பேர் கூடுதலாக தேர்ச்சி பெற்றிருந்தனர். தமிழகத்தில் 6-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை அரசு பள்ளியில் படித்து 'நீட்' தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு மருத்துவப் படிப்பில் சேர உள் ஒதுக்கீடு வழங்கப்பட்டு வருகிறது.
உள் ஒதுக்கீடு மூலம் 4 பேர்
இந்த உள் ஒதுக்கீடு அடிப்படையில் மருத்துவக்கல்லூரிகளில் சேருவதற்கு அரசு பள்ளி மாணவர்களுக்கான கலந்தாய்வில் பெரம்பலூர் மாவட்டத்தில் அரசு பள்ளியில் பயின்ற 3 மாணவிகளுக்கும், ஒரு மாணவருக்கும் என மொத்தம் 4 பேருக்கு மருத்துவப்படிப்பில் சேர இடம் கிடைத்துள்ளது. இதில் வேப்பந்தட்டை அரசு மேல்நிலைப்பள்ளியில் பயின்ற மாணவியான தொண்டபாடியை சேர்ந்த சுபாஷினிக்கும், பெரம்பலூர் அரசு மேல்நிலைப்பள்ளி "சூப்பர் 30" என்ற வகுப்பில் பயின்ற மாணவியான கொளத்தூரை சோ்ந்த தீபமாரிக்கும் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரியில் இடம் கிடைத்தது.
இதேபோல் பெரம்பலூர் அரசு மேல்நிலைப்பள்ளி சூப்பர் 30 வகுப்பில் பயின்ற மாணவியான தெரணியை சேர்ந்த வித்யாவுக்கு சென்னை அரசு மருத்துவக்கல்லூரியிலும், மாணவர் எலந்தக்குழியை சேர்ந்த ஆதித்யாவுக்கு சென்னையில் தனியார் மருத்துவக்கல்லூரியிலும் இடம் கிடைத்துள்ளது.
தாயின் கனவு நிறைவேறியது
இதில் மாணவர் ஆதித்யா முதன்முறையாக எழுதிய 'நீட்' தேர்வில் தேர்ச்சி பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது. இதைத்தொடர்ந்து 4 மாணவ-மாணவிகளுக்கு நேரிலும், சமூக வலைத்தளங்களிலும் வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது. இதில் சுபாஷினியின் தந்தை வெளிநாட்டில் கட்டுமான தொழிலும், மற்றவர்களின் தந்தைகள் கூலி வேலையும் செய்து வருகின்றனர்.
தீபமாரியின் தாய் ஏற்கனவே இறந்து விட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. அவர் மருத்துவ படிப்பு படிக்க வேண்டும் என்ற தாயின் கனவை நிறைவேற்றி விட்டதாக கூறினார். கடந்த ஆண்டு மருத்துவப்படிப்பில் 7.5 சதவீதம் உள் ஒதுக்கீட்டினால் பெரம்பலூர் மாவட்ட அரசு பள்ளி மாணவ-மாணவிகளில் 6 பேருக்கு மருத்துவக்கல்லூரியில் சேர இடம் கிடைத்து, அவர்கள் தற்போது மருத்துவ படிப்பு படித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.