விருத்தாசலம் அருகே பரபரப்புகாட்டுப்பன்றிகளை வேட்டையாட வைத்திருந்த நாட்டுவெடி வெடித்து 4 பேர் படுகாயம்முதியவரின் கால் துண்டானது

விருத்தாசலம் அருகே, காட்டுப்பன்றிகளை வேட்டையாட வைத்திருந்த நாட்டு வெடி வெடித்து 4 பேர் படுகாயமடைந்தனர். இதில் முதியவர் ஒருவரின் கால் துண்டானது.

Update: 2023-04-20 18:45 GMT

விருத்தாசலம்,

வெடித்து சிதறியது

கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அருகே ஆலடி குருவங்குப்பம் கிராமத்தில் உள்ள முந்திரி தோப்பில் நேற்று காலை பயங்கர சத்தத்துடன் வெடி வெடித்து சிதறியது. ஏதோ குண்டு வெடித்தது போல் சத்தம் கேட்டதை அறிந்ததும் அப்பகுதியை சேர்ந்தவர்கள் அங்கு ஓடிச்சென்று பார்த்தனர்.

அப்போது அங்கு புகை மண்டலமாக இருந்தது. முந்திரி தோப்பில் கிடந்த சருகுகள் சிதறி கிடந்தன. சற்று தூரத்தில் ரத்த காயங்களுடன் 4 பேர் கிடந்தனர்.

4 பேர் காயம்

அதில் முதியவர் ஒருவர் கால் துண்டாகி கிடந்தார். இது பற்றி விசாரித்த போது, அவர்கள் அதே கிராமத்தை சேர்ந்த ரங்கநாதன் (வயது 60). காசிநாதன் மகன் இளையக்குமார் (31), ஏழுமலை மகன் ரகுபதி (13), உக்கிரவேல் மகன் மருதுபாண்டி (23) ஆகியோர் என்பது தெரிந்தது. இதில் ரங்கநாதனின் வலது கால் துண்டாகி இருந்தது.

இதையடுத்து அவர்கள் 4 பேரையும், மீட்டு சிகிச்சைக்காக விருத்தாசலம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவர்கள் சிகிச்சை பெற்றனர். தொடர்ந்து மேல்சிகிச்சைக்காக மருது பாண்டி விருத்தாசலத்தில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியிலும், ரங்கநாதன் புதுச்சேரி ஜிப்மர் ஆஸ்பத்திரியிலும் அனுமதிக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.

காட்டுப்பன்றிகளை வேட்டையாட...

இதற்கிடையில் இது பற்றி தகவல் அறிந்ததும் விருத்தாசலம் துணை போலீஸ் சூப்பிரண்டு ஆரோக்கியராஜ் மற்றும் ஆலடி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். மேலும் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருவோரையும் பார்வையிட்டு அவர்களிடமும் விசாரணை நடத்தினர்.

விசாரணையில், 4 பேரும் சேர்ந்து முந்திரி தோப்புக்கு முந்திரி பழங்கள், கொட்டைகளை சாப்பிட வரும் காட்டுப்பன்றிகளை வேட்டையாடுவதற்காக அங்குள்ள புளிய மரம் அருகில் நாட்டு வெடி வைத்த போது, அது தவறுதலாக வெடித்து சிதறியதும், இதில் 4 பேரும் காயமடைந்ததும் தெரிய வந்தது.

பொருட்கள் பறிமுதல்

மேலும் முந்திரி தோப்பில் வெடி மருந்துக்கு பயன்படுத்தப்படும் பொருட்கள், இறைச்சி கொழுப்பு, நூல், கூழாங்கற்கள் உள்ளிட்ட பொருட்கள் சிதறி கிடந்தன. அவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். இதற்கிடையில் ரங்கநாதனின் துண்டான காலை போலீசார் தேடிய போது, அது சம்பவம் நடந்த இடத்தில் இருந்து சுமார் 300 மீட்டர் தூரத்தில் தூக்கி வீசப்பட்டிருந்ததை கண்டறிந்து எடுத்தனர். சம்பவம் அறிந்ததும் விருத்தாசலம் தாசில்தார் அந்தோணிராஜ் தலைமையிலான வருவாய்த்துறையினர் மற்றும் கியூ பிரிவு போலீசார் சம்பவ இடத்தை பார்வையிட்டு, விசாரணை நடத்தினர்.

தடய அறிவியல் சோதனை

வேறு ஏதேனும் வெடி மருந்துகள் வைக்கப்பட்டுள்ளதா? என போலீசார், விழுப்புரம் தடய அறிவியல் நிபுணர்கள் மற்றும் கடலூர் வெடிகுண்டு சோதனை நிபுணர்கள் ஆய்வு செய்தனர். மோப்பநாய் மூலமாகவும் சோதனை நடத்தப்பட்டது. சோதனை முடிவில் வேறு ஏதும் வெடிமருந்து பொருட்கள் கிடைக்கவில்லை. தடய அறிவியல் நிபுணர்கள் முக்கிய தடயங்களை மட்டும் சேகரித்துச்சென்றனர்.

இது பற்றி கிராம நிர்வாக அலுவலர் பிரேம்குமார் ஆலடி போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் பரந்தாமன் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இருப்பினும் காட்டுப்பன்றியை வேட்டையாட வைத்திருந்த நாட்டு வெடி வெடித்து 4 பேர் காயமடைந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Tags:    

மேலும் செய்திகள்