கல்லூரி மாணவர் உள்பட 4 பேர் 'போக்சோ'வில் கைது
பழனியில், பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த கல்லூரி மாணவர் உள்பட 4 பேரை ‘போக்சோ'வில் போலீசார் கைது செய்தனர்.
பழனி பகுதியில் உள்ள ஒரு விடுதியில் தங்கி படிக்கும் பள்ளி மாணவிகள் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாவதாக மாவட்ட குழந்தைகள் நலத்துறைக்கு புகார் வந்தது. அதைத்தொடர்ந்து குழந்தைகள் நலத்துறை அதிகாரிகள் சம்பந்தப்பட்ட விடுதிக்கு சென்று மாணவிகளிடம் விசாரணை நடத்தினர். மேலும் இந்த சம்பவம் குறித்து பழனி அனைத்து மகளிர் போலீஸ்நிலையத்திலும் புகார் கொடுக்கப்பட்டது. அதன்பேரில் இன்ஸ்பெக்டர் கவிதா தலைமையிலான போலீசார் தீவிர விசாரணை நடத்தினர்.
விசாரணையில், பழனி சத்யாநகரை சேர்ந்த ராகுல் (வயது 25), பரமானந்தம் (24), கிருபாகரன் (23) மற்றும் 18 வயது கல்லூரி மாணவர் ஆகியோர் தான் விடுதியில் தங்கி படிக்கும் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்தனர் என்பது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து 4 பேர் மீதும் 'போக்சோ' சட்டத்தின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து அவர்களை கைது செய்தனர். பின்னர் அவர்கள் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு திண்டுக்கல் சிறையில் அடைக்கப்பட்டனர்.
பணியிடை நீக்கம்
இதற்கிடையே விடுதி பணியில் அலட்சியமாக இருந்ததாக காப்பாளர் அமுதா, காவலாளி விஜயா ஆகியோரை பணியிடை நீக்கம் செய்து மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலர் சண்முகம் உத்தரவிட்டார்.
பழனியில் பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் 4 பேர் கைது செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.