ஆட்டோ கவிழ்ந்து 3 மாணவிகள் உள்பட 4 பேர் காயம்

ஆட்டோ கவிழ்ந்து 3 மாணவிகள் உள்பட 4 பேர் காயம் அடைந்தனர். அவர்களை கலெக்டர் பார்வையிட்டார்.

Update: 2022-11-22 18:13 GMT

பனப்பாக்கம் அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்-1 படிக்கும் ஓச்சேரியை சேர்ந்த பிரேமலதா, மாமண்டூரை சேர்ந்த நமிதா, உத்திரம்பட்டு கிராமத்தை சேர்ந்த கீதா உள்ளிட்ட 6 மாணவிகள், 2 ஆசிரியர்கள் மற்றும் ஒரு செவிலியர் என 9 பேர் நேற்று ஷேர் ஆட்டோவில் ஓச்சேரியில் இருந்து பனப்பாக்கத்திற்கு சென்று கொண்டிருந்தனர். மேலப்புலம் மோட்டூர் அருகே சென்று கொண்டிருந்தபோது எதிரே வேகமாக வந்த வாகனம் ஆட்டோ மீது மோதுவது போல் வந்துள்ளது. இதனால் ஆட்டோவை டிரைவர் திடீரென திருப்பி உள்ளார்.

இதில் நிலை தடுமாறிய ஆட்டோ சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. விபத்தில் சிக்கிய மாணவிகள் பிரேமலதா, நமிதா, கீதா மற்றும் செவிலியர் ஜமுனா ஆகிய 4 பேரை பொதுமக்கள் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் வாலாஜா அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து தகவல் அறிந்த கலெக்டர் பாஸ்கர பாண்டியன் மாணவிகளுக்கு உரிய சிகிச்சை அளிக்க உத்தரவிட்டார். பின்னர் மருத்துவமனைக்கு நேரில் சென்று மாணவிகளிடம் விபத்து குறித்து கேட்டறிந்தார். மருத்துவ பணிகள் இணை இயக்குனர் லட்சுமணன், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் உஷா, வாலாஜா அரசு மருத்துவமனை மருத்துவ அலுவலர் உஷா நந்தினி ஆகியோர் உடன் இருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்