போலி சாதி சான்றிதழ் கொடுத்து பணியில் சேர்ந்த விவகாரம்: 3 டாக்டர்கள் உள்பட 4 பேருக்கு சிறை சேலம் கோர்ட்டில் தீர்ப்பு

போலி சாதி சான்றிதழ் தயாரித்து வேலைக்கு சேர்ந்த 3 டாக்டர்கள் உள்பட 4 பேருக்கு சிறை தண்டனை விதித்து சேலம் கோர்ட்டில் தீர்ப்பு அளிக்கப்பட்டது.

Update: 2022-11-04 19:54 GMT

சேலம், 

அரசு பணி

கடந்த 1995-ம் ஆண்டு தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் மூலம் உதவி அறுவை சிகிச்சை டாக்டர் மற்றும் வேளாண்மை அதிகாரி பணிக்கு ஆட்கள் தேர்வு செய்ய அறிவிப்பு வெளியிடப்பட்டது.

இதில் டாக்டர் படிப்பு முடித்து இருந்த சேலம் மாவட்டம் கொளத்தூர் பகுதியை சேர்ந்த ராஜேந்திரன் (வயது 54). அதே பகுதியை சேர்ந்த ராஜேந்திரகுமார் (52). கவுசல்யா (47) ஆகிய 3 பேரும் அரசு டாக்டர் பணிக்கு விண்ணப்பம் செய்தனர். சென்னை மயிலாப்பூரை சேர்ந்தவர் லதா (49) என்பவர் இளங்கலை வேளாண்மை படிப்பு படித்து இருந்ததால் அவர், வேளாண் அதிகாரி பணிக்கு விண்ணப்பம் செய்தார். இவர்கள் 4 பேருக்கும் அரசு பணி கிடைத்தது. அதாவது, ராஜேந்திரன், ராஜேந்திரகுமார், கவுசல்யா ஆகிய 3 பேரும் அரசு டாக்டராக பணியில் சேர்ந்தனர். லதா வேளாண்மை அலுவலராக பணியில் சேர்ந்தார்.

சிறை தண்டனை

இந்த நிலையில் 4 பேரின் சான்றிதழ்களை சரிபார்ப்பதற்காக சேலம் கலெக்டர் அலுவலகத்திற்கு தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் கடந்த 1996-ம் ஆண்டு அதிகாரிகளை அனுப்பி வைத்தது. அவர்களது சான்றிதழ்கள் ஆய்வு நடத்திய போது 4 பேரும் போலியாக சாதிச்சான்று கொடுத்து அரசு வேலைக்கு சேர்ந்து இருப்பது தெரிய வந்தது. இதையடுத்து விசாரணை நடத்திய அரசு பணியாளர் தேர்வாணைய அதிகாரி, சி.பி.சி.ஐ.டி. போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் சி.பி.சி.ஐ.டி. போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

இந்த வழக்கு சேலம் ஜூடிசியில் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டு எண்-4 ல் நடந்து வந்தது. வழக்கு முடிவடைந்து நேற்று தீர்ப்பு கூறப்பட்டது. இதில் போலி சாதிச்சான்றிதழ் கொடுத்து அரசு டாக்டர் பணியில் சேர்ந்த ராஜேந்திரன், ராஜேந்திரகுமார், கவுசல்யா மற்றும் உதவி வேளாண்மை அலுவலராக பணியில் சேர்ந்த லதா ஆகிய 4 பேருக்கும் தலா 3 ஆண்டுகள் சிறை தண்டனையும், தலா ரூ.8 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி யுவராஜ் தீர்ப்பு அளித்தார்.

போலி சாதிச்சான்று

சிறை தண்டனை பெற்ற 4 பேருக்கும் போலி சாதிச்சான்று தயாரித்து வழங்கிய சம்பந்தப்பட்ட அலுவலர் மற்றும் உதவியாளர் 2 பேரும் ஏற்கனவே இறந்து விட்டனர். இறந்த இவர்கள் 500-க்கும் மேற்பட்டவர்களுக்கு போலி சாதிச்சான்று வழங்கி இருப்பதாக கூறப்படுகிறது. இது குறித்து சேலம் மாவட்ட கலெக்டர் அலுவலகம் மற்றும் சம்பந்தப்பட்ட தாசில்தார் அலுவலகங்களில் விசாரணை நடத்தப்பட ஏற்கனவே உயர் அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.

தண்டனை பெற்ற ராஜேந்திரன் தற்போது நாமக்கல் அரசு ஆஸ்பத்திரியில் டாக்டராக பணியாற்றி வருகிறார். அரசு டாக்டர் பணியை ராஜினாமா செய்து விட்டு கவுசல்யா சென்னையில் தனியாக ஆஸ்பத்திரி நடத்தி வருகிறார். இதேபோல் ராஜேந்திரகுமாரும் தற்போது வேலையை ராஜினாமா செய்து விட்டு தர்மபுரியில் தனியாக ஆஸ்பத்திரி நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது. லதா, வேளாண்துறையில் சென்னையில் பணிபுரிந்து வருகிறார்.

Tags:    

மேலும் செய்திகள்