வாலிபரிடம் நகை பறித்த 4 பேர் சிக்கினர்
செல்போன் செயலி மூலம் பழகி வாலிபரிடம் நகை, பணம் பறித்த 4 பேர் கைது செய்யப்பட்டனர்.
சரவணம்பட்டி
செல்போன் செயலி மூலம் பழகி வாலிபரிடம் நகை, பணம் பறித்த 4 பேர் கைது செய்யப்பட்டனர்.
இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
செல்போன் செயலி
ராமநாதபுரம் மாவட்டம் சுந்தரமுடையான் பகுதியை சேர்ந்தவர் அர்ச்சுனன். இவருடைய மகன் தியாகராஜன் (வயது33). இவர் கோவை சரவணம்பட்டியில் உள்ள தனியார் விடுதியில் அறை எடுத்து தங்கி ஹோம் நர்சாக பணியாற்றி வருகிறார்.
இந்த நிலையில் அவருக்கு செல்போன் செயலி மூலம் ராக்கி என்பவருடன் அறிமுகம் ஏற்பட்டது. அதைத்தொடர்ந்து அவர்கள் 2 பேரும் அந்த செயலி மூலம் நன்கு பழகி வந்தனர்.
இந்நிலையில் சரவணம்பட்டி - துடியலூர் சாலையில் உள்ள தனியார் பள்ளியின் பின்புறம் உள்ள பகுதிக்கு வருமாறு தியாக ராஜை, ராக்கி அழைத்து உள்ளார். அதை ஏற்று அங்கு சென்ற தியாகராஜனை 4 பேர் கும்பல் சுற்றி வளைத்தது.
நகை பறித்த கும்பல்
பின்னர் அவர்கள், கத்தியை காட்டி மிரட்டி தியாகராஜன் கழுத்தில் அணிந்திருந்த 6 கிராம் தங்கச்சங்கிலி மற்றும் 2 கிராம் மோதிரம், ரூ.5 ஆயிரம் ஆகியவற்றை பறித்துக் கொண்டு தப்பி சென்றது.
இது குறித்து தியாகராஜன் அளித்த புகாரின் பேரில் சரவணம்பட்டி போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.
இதில் செல்போன் செயலியில் ராக்கி என்ற பெயரில் பேசியது, தூத்துக் குடி மாவட்டம் கோவில்பட்டியை சேர்ந்த ரவி என்பவ ரது மகன் கார்த்திகேயன் (27) என்பதும், அவர் தனது கூட்டாளிகளுடன் சேர்ந்து தியாகராஜனிடம் நகை பறிப்பில் ஈடுபட்டது தெரிய வந்தது.
4 பேர் கைது
இதைத்தொடர்ந்து கார்த்திகேயனை போலீசார் கைது செய்தனர். அவர் கொடுத்த தகவலின் பேரில் அவரது நண்பர்களான தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறை சேர்ந்த வேல்முத்து என்பவரது மகன் மாரிச்செல்வம் (23), திருச்சி துறையூரை சேர்ந்த ரங்கராஜ் என்பவரது மகன் அபிராம் (19), திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் ஊரல்பட்டி யை சேர்ந்த ராம் பாண்டியன் என்பவரது மகன் ஹரிவிஷ்ணு (21) ஆகியோரையும் போலீசார் கைது செய்தனர்.
இவர்கள் 4 பேரும் செல்போன் செயலி மூலம் அறிமுகமாகும் நபர்களிடம் உல்லாசமாக இருக்கலாம் என்று ஆசை வார்த்தை கூறி ஆள்நடமாட்டம் இல்லாத பகுதிக்கு வரவழைத்து நகை, பணத்தை கொள்ளையடித்ததும் போலீஸ் விசாரணையில் தெரிய வந்து உள்ளது.