மிளா இறைச்சியை சமைத்து சாப்பிட்ட 4 பேர் கைது
அச்சன்புதூர் அருகே மிளா இறைச்சியை சமைத்து சாப்பிட்ட 4 பேர் கைது செய்யப்பட்டனர்
கடையநல்லூர்:
தென்காசி மாவட்டம் அச்சன்புதூர் அருகே மேக்கரை எருமைசாவடி அருகே செந்நாய் கடித்த மிளாவின் இறைச்சியை சமைத்து சாப்பிடுவதாக மாவட்ட வன அலுவலர் முருகனுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதைத்தொடர்ந்து மாவட்ட வன அலுவலர் முருகன் உத்தரவின்பேரில் ரேஞ்சர் சுரேஷ் தலைமையில் கடையநல்லூர் மற்றும் மேக்கரை பிரிவு வனவர்கள் முருகேசன், அம்பலவாணன், பண்பொழி பீட் வனகாப்பாளர்கள் முத்துச்சாமி, ராஜா ஆகியோர் சம்பந்தப்பட்ட கிராமத்திற்கு சென்று சோதனை நடத்தினர்.
அப்போது, மேக்கரை எருமைசாவடி பகுதியில் செந்நாய் கடித்து இறந்து கிடந்த மிளாவின் இறைச்சியை செல்லத்துரை மகன்கள் காசிராஜன், ஆறுமுகம், இசக்கிமுத்து, அய்யப்பன் என ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேரும் சேர்ந்து பங்குபோட்டு சமைத்து சாப்பிட்டது விசாரணையில் தெரியவந்தது.
இதைத்தொடர்ந்து மிளாவின் கால், தோல் ஆகியவற்றை வனத்துறையினர் பறிமுதல் செய்தனர். இதுகுறித்து வனத்துறையினர் வன உயிரின பாதுகாப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிந்து 4 பேரை கைது செய்தனர். பின்னர் மாவட்ட வன அலுவலர் முருகனின் உத்தரவின் பேரில் வன உயிரின பாதுகாப்பு சட்டத்தின்படி இவர்களுக்கு கடையநல்லூர் வன ரேஞ்சர் சுரேஷ் தலா ரூ.25 ஆயிரம் வீதம் மொத்தம் ரூ.1 லட்சம் அபராதம் விதித்து, எச்சரிக்கை செய்து அனுப்பி வைத்தார்.