ஆதித்தமிழர் கட்சியினர் 4 பேர் கைது
நெல்லையில் ரெயில் மறியலுக்கு முயன்ற ஆதித்தமிழர் கட்சியினர் 4 பேரை போலீசார் கைது செய்தனர்.;
மத்திய அரசு கொண்டு வந்துள்ள விஸ்வகர்மா யோஜனா திட்டம் நாட்டில் மீண்டும் குலத்தொழிலை ஊக்குவிக்கும் வகையில் இருப்பதாகவும், இந்த திட்டத்தை மத்திய அரசு திரும்ப பெற வேண்டும் என்று கூறி ஆதித்தமிழர் கட்சி சார்பில் நேற்று ரெயில் மறியல் போராட்டம் அறிவிக்கப்பட்டிருந்தது. இதையொட்டி நெல்லை சந்திப்பு ரெயில் நிலையம் முன்பு மாநகர உதவி போலீஸ் கமிஷனர் ராஜேஷ்வரன், சந்திப்பு இன்ஸ்பெக்டர் பொன்ராஜ் தலைமையில் 100-க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டு இருந்தனர். இந்தநிலையில் ரெயில் மறியலுக்கு ஆதித்தமிழர் கட்சி மாவட்ட தலைவர் இளையராஜா தலைமையில் மகளிர் அணி தமிழரசி, முத்துமாரி உள்பட 4 பேர் மட்டுமே வந்தனர். இவர்களில் 3 பேர் பெண்கள். அவர்கள் ரெயில் மறியலுக்கு சென்றபோது போலீசார் அவர்களை கைது செய்து அழைத்துச்சென்றனர்.