திருப்பூரில் பனியன் நிறுவனத்தில் காவலாளியை அடித்துக்கொலை செய்த 4 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து திருப்பூர் முதன்மை மாவட்ட கோர்ட்டில் தீர்ப்பளிக்கப்பட்டது.
காவலாளி கொலை
திருப்பூர் கணக்கம்பாளையம் பிலால் நகரை சேர்ந்தவர் காஜா மைதீன் (வயது 58). இவர் திருப்பூர் வாலிபாளையத்தில் உள்ள பனியன் நிறுவனத்தில் காவலாளியாக வேலை செய்து வந்தார். கடந்த 14-11-2020 அன்று மாலை காஜா மைதீன் வீட்டில் இருந்து பனியன் நிறுவனத்துக்கு வேலைக்கு சென்றார். 2 நாட்கள் ஆகியும் அவர் வீடு திரும்பவில்லை.
இதைத்தொடர்ந்து காஜா மைதீனின் மகன் அன்சாரி, சம்பந்தப்பட்ட நிறுவனத்துக்கு கடந்த 16-11-2020 அன்று சென்று பார்த்தபோது அங்குள்ள அறையில் காஜா மைதீன் இறந்து கிடந்தார். திருப்பூர் வடக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் கணேசன் பிணத்தை மீட்டு விசாரணை நடத்தினார். இதில் காஜா மைதீன் அடித்துக்கொலை செய்யப்பட்டது தெரியவந்தது.
சரக்கு ஆட்டோவில் வந்தனர்
இந்த கொலை சம்பவம் தொடர்பாக புதுக்கோட்டை கைக்குறிச்சியை சேர்ந்த பழனிச்சாமி (28), அவரது நண்பர்களான அதே பகுதியை சேர்ந்த முருகேசன் (27), சக்தி கணேஷ் (25), கார்த்தி (27) ஆகியோரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தினர். பழனிச்சாமி வாலிபாளையத்தில் சம்பந்தப்பட்ட பனியன் நிறுவனத்தில் உள்ள அறையில் தங்கியிருந்து குடும்பத்துடன் வேலை செய்து வந்துள்ளார். சம்பவத்துக்கு 2 மாதத்துக்கு முன்பு மனைவியுடன் தகராறு ஏற்பட்டதால் பனியன் நிறுவனத்தில் இருந்து ரூ.7 ஆயிரம் முன்பணம் பெற்று சொந்த ஊர் சென்றுள்ளார்.
அதன்பிறகு கடந்த 15-11-2020 அன்று பழனிச்சாமி புதுக்கோட்டையில் இருந்து சரக்கு ஆட்டோவில் தனது நண்பர்கள் முருகேசன், சக்தி கணேஷ், கார்த்தி ஆகியோருடன் திருப்பூர் வந்துள்ளார். தீபாவளி பண்டிகை விடுமுறை என்பதால் பனியன் நிறுவனத்தில் ஆட்கள் இருக்காது, எனவே தனது அறையில் இருந்து தட்டுமுட்டு சாமான்களை யாருக்கும் தெரியாமல் எடுத்துச்செல்லலாம் என்று அங்கு வந்துள்ளார்.
அடித்துக்கொலை
பனியன் நிறுவனத்துக்குள் சுவர் ஏறி சென்றபோது காவலாளி காஜா மைதீன் இருந்துள்ளார். அவர்களை பொருட்களை எடுத்துச்செல்ல விடாமல் அவர் தடுத்துள்ளார். பின்னர் அவர் பனியன் நிறுவன உரிமையாளருக்கு செல்போனில் தகவல் தெரிவிக்க முயன்றதை பார்த்த பழனிச்சாமி உள்ளிட்ட 4 பேரும் சேர்ந்து அங்கு கிடந்த கிரிக்கெட் மட்டையால் தலையில் சரமாரியாக அடித்து காஜா மைதீனை கொலை செய்துள்ளனர்.
பின்னர் உடலை அங்குள்ள அறையில் மறைத்து வைத்து விட்டு, பொருட்களை அங்கிருந்து ஆட்டோவில் ஏற்றிச் சென்றது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து 4 பேரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
4 பேருக்கு ஆயுள் தண்டனை
இந்த வழக்கு திருப்பூர் முதன்மை மாவட்ட நீதிமன்றத்தில் நடந்து வந்தது. நேற்று இந்த வழக்கில் தீர்ப்பு கூறப்பட்டது. காவலாளியை அடித்துக்கொலை செய்த குற்றத்துக்கு பழனிச்சாமி, முருகேசன், சக்தி கணேஷ், கார்த்தி ஆகிய 4 பேருக்கும் ஆயுள் தண்டனை, ரூ.2 ஆயிரம் அபராதம், நிறுவனத்துக்குள் அத்துமீறி நுழைந்து தாக்கிய குற்றத்துக்கு 2 ஆண்டு சிறை தண்டனை, ரூ.1,000 அபராதம் விதித்து நீதிபதி ஸ்வர்ணம் நடராஜன் தீர்ப்பளித்தார். இந்த வழக்கில் அரசு தரப்பில் திருப்பூர் மாவட்ட குற்றத்துறை அரசு வக்கீல் கனகசபாபதி ஆஜராகி வாதாடினார்.