பெரம்பூர் லோகோ ரெயில் நிலையத்தில் மோதலில் ஈடுபட்ட கல்லூரி மாணவர்கள் 4 பேர் கைது

பெரம்பூர் லோகோ ரெயில் நிலையத்தில் இரு கல்லூரி மாணவர்கள் மோதலில் ஈடுபட்டனர். இதில் 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Update: 2023-10-11 05:51 GMT

அரக்கோணத்தில் இருந்து சென்னை சென்டிரல் நோக்கி நேற்று முன்தினம் காலை மின்சார ரெயில் வந்து கொண்டிருந்தது. அந்த ரெயிலில் சென்னையில் உள்ள மாநில கல்லூரி மற்றும் பச்சையப்பன் கல்லூரிகளை சேர்ந்த மாணவர்கள் சிலர் பயணம் செய்தனர்.

பெரம்பூர் லோகோ ரெயில் நிலையம் வந்ததும், மின்சார ரெயிலில் இருந்து கீழே இறங்கிய ஒரு கல்லூரியை சேர்ந்த 40-க்கும் மேற்பட்ட மாணவர்கள், தண்டவாளத்தில் கிடந்த கற்களை எடுத்து மற்றொரு கல்லூரி மாணவர்கள் பயணம் செய்த ரெயில் பெட்டியின் மீது சரமாரியாக வீசினர். பதிலுக்கு அவர்களும் கீழே இறங்கி, கற்களை வீசி எறிந்தனர். இதனால் இடமே போர்க்களம்போல் காட்சி அளித்தது. இந்த கல்வீச்சில் சில கல்லூரி மாணவர்கள் சிறிய அளவில் காயம் அடைந்தனர்.

சம்பவம் தொடர்பாக பெரம்பூர் ரெயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து ரெயில் நிலையத்தில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து கல்வீச்சில் ஈடுபட்ட கல்லூரி மாணவர்களை தேடி வந்தனர்.

இந்நிலையில் பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் மீது கல் வீசிய வழக்கில் மாநிலக் கல்லூரியில் படித்து வரும் திருவள்ளூர் அடுத்த போலிவாக்கம் ஹரிஷ் (வயது 19), நுங்கம்பாக்கத்தைச் சேர்ந்த மாதேஷ் (19), ஒதப்பையைச் சேர்ந்த பார்த்திபன் (19), மற்றும் 18 வயது கொண்ட மாணவர் ஆகிய 4 பேரையும் ரெயில்வே போலீசார் நேற்று கைது செய்தனர். மேலும் சில மாணவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்