விதிமீறிய 4 கட்டிடங்களுக்கு 'சீல்'

ஊட்டியில் விதிமுறைகளை மீறி கட்டப்பட்ட 4 கட்டிடங்களுக்கு நகராட்சி அதிகாரிகள் சீல் வைத்து நடவடிக்கை எடுத்தனர்.

Update: 2022-12-14 18:45 GMT

ஊட்டி, 

ஊட்டியில் விதிமுறைகளை மீறி கட்டப்பட்ட 4 கட்டிடங்களுக்கு நகராட்சி அதிகாரிகள் சீல் வைத்து நடவடிக்கை எடுத்தனர்.

மாஸ்டர் பிளான்

நீலகிரி மாவட்டத்தின் சுற்றுச்சூழலை பாதுகாக்கவும், பேரிடர்கள் ஏற்படுவதை கருத்தில் கொண்டும் 1993-ம் ஆண்டு மாஸ்டர் பிளான் திட்டம் கொண்டு வரப்பட்டது. அதன்படி வீட்டுக்கு என்று அனுமதி பெற்று தங்கும் விடுதி மற்றும் வணிக கட்டிடங்களாக மாற்றக்கூடாது. குடியிருப்பு பகுதிகளில் தங்கும் விடுதிகள், வணிக கட்டிடங்கள், ஓட்டல்கள் கட்டக்கூடாது. 7 மீட்டர் உயரத்துக்கு மேல் கட்டிடம் கட்ட அனுமதி இல்லை உள்ளிட்ட விதிமுறைகள் உள்ளன.

மேலும் கட்டிடங்கள் கட்ட உள்ளாட்சி, வனத்துறை, புவியியல் துறை மற்றும் வேளாண் பொறியியல் துறை ஆகிய துறைகளிடம் அனுமதி பெற வேண்டும் என உத்தரவு உள்ளது. எனினும், சிலர் இந்த உத்தரவுகளை பின்பற்றாமல் கட்டிடங்களை கட்டி வருகின்றனர். இவ்வாறு கட்டப்பட்ட கட்டிடங்களை முறையாக கணக்கெடுத்து நடவடிக்கை எடுக்க தமிழக அரசு உத்தரவிட்டு உள்ளது. அதன்படி ஊட்டி நகராட்சி அதிகாரிகள் ஆய்வு செய்து நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

4 கட்டிடங்களுக்கு சீல்

விதிமுறைகளை மீறி தங்கும் விடுதிகள், வணிக நிறுவன கட்டிடங்கள் இருப்பதாக நகராட்சி அதிகாரிகளுக்கு புகார்கள் வந்தன. இதன்பேரில் ஊட்டி நகராட்சி ஆணையாளர் காந்திராஜன் உத்தரவின் பேரில் ஊட்டி நகராட்சி திட்டமைப்பு அதிகாரி ஜெயவேல், கட்டிட ஆய்வாளர் மீனாட்சி மற்றும் நகராட்சி பணியாளர்கள் ஆய்வு செய்தனர்.

இதில் ஊட்டி நகராட்சிக்கு உட்பட்ட ஹேவ்லாக் சாலை பகுதியில் விதிமுறையை மீறி 4 கட்டிடங்கள் கட்டப்பட்டு உள்ளது தெரியவந்தது. இதனை அதிகாரிகள் உறுதி செய்தனர். இந்தநிலையில் நகரமைப்பு அதிகாரிகள் விதிகளை மீறி கட்டிய 4 கட்டிடங்களுக்கு சீல் வைத்து நடவடிக்கை எடுத்தனர். மேலும் அங்கு கட்டுமான பணிகளை தொடரக்கூடாது. மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுத்தனர். மேலும் கட்டிடங்கள் முன்பு நோட்டீஸ் ஒட்டப்பட்டு உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்