4 கடைகளின் பூட்டை உடைத்து பணம் திருட்டு

வடசித்தூரில் 4 கடைகளின் பூட்டை உடைத்து பணம் திருடப்பட்டு உள்ளது. இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Update: 2023-02-20 18:45 GMT

நெகமம்

வடசித்தூரில் 4 கடைகளின் பூட்டை உடைத்து பணம் திருடப்பட்டு உள்ளது. இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

பூட்டு உடைப்பு

நெகமம் அருகே வடசித்தூர் பகுதியில் உள்ள கிணத்துக்கடவு-காட்டம்பட்டி சாலையோரத்தில் அரிசி, செல்போன், சலூன், பேன்சி உள்பட பல்வேறு கடைகள் செயல்பட்டு வருகின்றன.

இந்த கடைகளை வியாபாரிகள் நேற்று முன்தினம் அதிகாலையில் வழக்கம்போல் திறக்க வந்தனர். அப்போது 4 கடைகளின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது. மேலும் அரிசி கடையில் ரூ.2 ஆயிரம், செல்போன் கடையில் ஒரு செல்போன் திருடு போயிருந்தது.

கேமரா ஆய்வு

மேலும் சலூன் கடையில் கல்லா பெட்டி திறந்து கிடந்தது. அதில் சில்லறை மட்டுமே இருந்ததால், அது திருட்டு போகவில்லை. இது தவிர அந்த பகுதியில் இருந்த கண்காணிப்பு கேமரா, திருப்பி வைக்கப்பட்டு இருந்தது.

இதை கண்டு அதிர்ச்சி அடைந்த வியாபாரிகள் நெகமம் போலீசுக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் விரைந்து வந்த போலீசார், திருட்டு நடந்த கடைகளை பார்வையிட்டனர். பின்னர் கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு, அங்கு பதிவாகி இருந்த தடயங்கள் சேகரிக்கப்பட்டன. மேலும் கண்காணிப்பு கேமரா காட்சிகளும் ஆய்வு செய்யப்பட்டு வருகிறது.

அச்சம்

பின்னர் நடந்த விசாரணையில், நள்ளிரவில் அந்த பகுதிக்கு வந்த மர்ம ஆசாமிகள் கடைகளின் பூட்டை உடைத்து திருட்டில் ஈடுபட்டது தெரியவந்தது. தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதுகுறித்து வியாபாரிகள் கூறும்போது, எங்கள் பகுதியில் திருட்டு, வழிப்பறி சம்பவங்கள் அதிகரித்து விட்டது. தனியாக செல்பவர்களிடம் ஆயுதங்களை காட்டி மிரட்டி வாகனம், பணம், நகையை பறித்துவிடுகின்றனர். கடைகளின் பூட்டை உடைத்து பணத்தை திருடிவிடுகின்றனர். இதனால் மிகவும் அச்சமாக உள்ளது. எனவே போலீசார் கண்காணிப்பு பணியை தீவிரப்படுத்த வேண்டும் என்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்