ஆந்திராவுக்கு கடத்த முயன்ற 4 டன் ரேஷன் அரிசி சிக்கியது - 3 பேர் கைது

ஆந்திராவுக்கு 4 டன் ரேஷன் அரிசியை கடத்த முயன்ற 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2022-06-02 10:54 GMT

திருவள்ளூர் குடிமை பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு துறை போலீஸ் இன்ஸ்பெக்டர் சுந்தராம்பாள் தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர் நந்தினி உஷா மற்றும் போலீசார் திருவள்ளூர்- திருத்தணி சாலையில் நாராயணபுரம் கூட்ரோடில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த மினி லாரியை மடக்கி சோதனை செய்தனர். அப்போது அந்த மினி லாரியில் ஆந்திர மாநிலத்திற்கு கடத்துவதற்காக கொண்டு செல்லப்பட்ட 4 ஆயிரத்து 200 கிலோ ரேஷன் அரிசி இருந்ததை கண்டுபிடித்தனர்.

இதனைத்தொடர்ந்து ரேஷன் அரிசி கடத்தி வந்த சென்னை, வியாசர்பாடி, சர்மா நகர், சாஸ்திரி நகர் 11-வது தெருவை சேர்ந்த பெத்தராமன் (வயது 28), வியாசர்பாடி புதுநகரை சேர்ந்த சரவணன் (33), மற்றும் மதன் (21) ஆகிய 3 பேரையும் கைது செய்தனர். விசாரணையில் ஆந்திர மாநிலம் சித்தூர் பகுதியில் உள்ள ஓட்டல்களுக்கும், டிபன் கடைகளுக்கும் விற்பனை செய்ய ராணிப்பேட்டை மாவட்டம், அரக்கோணம் பகுதிகளில் உள்ள பொதுமக்களிடம் சேகரித்ததாக தெரிவித்தனர். இதனை தொடர்ந்து அவர்கள் 3 பேரையும் திருவள்ளூர் கோர்ட்டில் ஆஜர்படுத்திய போலீசார் சிறையில் அடைத்தனர். மேலும் கைப்பற்றப்பட்ட 4 ஆயிரத்து 200 கிலோ ரேஷன் அரிசியை திருவள்ளூரில் உள்ள தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக கிடங்கில் ஒப்படைத்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்