பணம் வைத்து சூதாடிய 4 பேர் கைது
பணம் வைத்து சூதாடிய 4 பேரை போலீசார் கைது செய்தனர்.
கரூர் மாவட்டம், நொய்யல் குறுக்குச்சாலையில் உள்ள நொய்யல் ஆற்றங்கரை ஓரம் உள்ள தென்னந்தோப்பில் சிலர் பணம் வைத்து சூதாடி கொண்டிருப்பதாக வேலாயுதம்பாளையம் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. தகவலின் அடிப்படையில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ரமேஷ் தலைமையிலான போலீசார் சம்பந்தப்பட்ட தென்னந்தோப்பிற்கு சென்று பார்த்தபோது, அங்கு சிலர் பணம் வைத்து சூதாடி கொண்டிருப்பது தெரிய வந்தது. இதையடுத்து சூதாடி கொண்டிருந்தவர்களை போலீசார் சுற்றி வளைத்து பிடித்து விசாரணை நடத்தியதில், அவர்கள் குப்பம் அருகே உள்ள அய்யம்பாளையத்தை சேர்ந்த ஈஸ்வரமூர்த்தி மகன் முருகேசன்(வயது 29), நொய்யல் குறுக்குச்சாலை பகுதியை சேர்ந்த ரவி(46), மரவம்பாளையம் நாடார்புரத்தை சேர்ந்த பாலசுப்பிரமணி(50), பெரிய வட்டம் பகுதியை சேர்ந்த மோகன்(57) என்பது தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் 4 பேரையும் கைது செய்த போலீசார், அவர்களிடம் இருந்து 4 மோட்டார் சைக்கிள்கள், ரூ.5 ஆயிரத்து 900 ஆகியவற்றை பறிமுதல் செய்து வழக்குப்பதிந்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.