உரிமையாளரிடம் ரூ.20 லட்சம் கேட்டு மிரட்டிய 4 பேர் கைது

கன்னியாகுமரியில் குட்காவுடன் டெம்போவை கடத்தி ரூ.20 லட்சம் கேட்டு மிரட்டிய 4 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும், டெம்போவில் குட்காவை ஏற்றி வந்தவரும் கைது செய்யப்பட்டார்.

Update: 2022-06-13 15:16 GMT

கன்னியாகுமரி:

கன்னியாகுமரியில் குட்காவுடன் டெம்போவை கடத்தி ரூ.20 லட்சம் கேட்டு மிரட்டிய 4 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும், டெம்போவில் குட்காவை ஏற்றி வந்தவரும் கைது செய்யப்பட்டார்.

குட்கா கடத்தல்

கன்னியாகுமரி பஸ் நிலையம் அருகே நேற்று முன்தினம் இரவு வாலிபர் ஒருவர் பதற்றத்துடன் சுற்றி திரிந்தார். அப்போது இரவு ரோந்து பணியில் இருந்த போலீசார் அந்த வாலிபரை பிடித்து போலீஸ் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரணை நடத்தினர்.

விசாரணையில், அவர் புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த ஆறுமுகம் (வயது34) என்பதும், பெங்களூருவில் இருந்து டெம்போவில் குட்கா கடத்தி வந்ததும் தெரியவந்தது.

வரும் வழியில் திருநெல்வேலியில் வைத்து 4 பேர் கொண்ட கும்பல், டெம்போவை கடத்தி கன்னியாகுமரிக்கு கொண்டு வந்தனர். பின்னர், டிரைவர் ஆறுமுகத்தை ஒரு விடுதியில் தங்க வைத்துள்ளனர்.

ரூ.20 லட்சம் கேட்டு மிரட்டல்

அத்துடன் அந்த கும்பல் டெம்போ உரிமையாளரிடம் செல்போனில் ரூ.20 லட்சம் கேட்டு பேரம் பேசி மிரட்டினர். இதற்கிடைேய ஆறுமுகம் அந்த கும்பலிடம் இருந்து தப்பி வந்தபோது போலீசில் சிக்கியது தெரிய வந்தது.

இதனையடுத்து போலீசார் சம்பந்தப்பட்ட விடுதிக்கு சென்று சோதனை செய்தனர். அப்போது அங்கு கத்தி, அரிவாள் போன்ற ஆயுதங்களுடன் 4 பேர் பதுங்கி இருந்தனர்.

அவர்களை பிடித்து விசாரணை நடந்திய போது அவர்கள் நாங்குநேரியைச் சேர்ந்த அருண்குமார் (23), ஆறுமுகம் (28), ஸ்ரீவைகுண்டத்தை சேர்ந்த சுப்பிரமணியன் (22) முத்துக்குமார் (22) என்பது தெரிய வந்தது. இவர்கள் ஓசூரில் இருந்து டெம்போவில் குட்கா கடத்தி வருவதை அறிந்து திருநெல்வேலியில் வைத்து டெம்போவை மடக்கி பிடித்து கன்னியாகுமரிக்கு கடத்தி வந்ததும் தெரிய வந்தது.

5 பேர் கைது

இதையடுத்து போலீசார் டெம்போவில் கடத்தி வந்த ரூ.13 லட்சம் மதிப்புள்ள குட்கா பொருட்களை பறிமுதல் செய்தனர். அவற்றை கடத்தி வந்த ஆறுமுகத்தை கைது செய்தனர்.

மேலும், டெம்போவை கடத்திய கும்பலை சேர்ந்த அருண்குமார், ஆறுமுகம், சுப்பிரமணியன், முத்துக்குமார் ஆகியோரையும் போலீசார் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட 5 பேரும் சிறையில் அடைக்கப்பட்டனர். இதுதொடர்பாக போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்