நாளை தொடங்கும் பிளஸ்-2 பொதுத்தேர்வை 39,273 மாணவ, மாணவிகள் எழுதுகிறார்கள்

சேலம் மாவட்டத்தில் 156 மையங்களில் நாளை பிளஸ்-2 தேர்வு தொடங்குகிறது. இந்த தேர்வை 39,273 மாணவ, மாணவிகள் எழுதுகிறார்கள்.

Update: 2023-03-11 20:31 GMT

பிளஸ்-2 தேர்வு

தமிழகம் முழுவதும் பிளஸ்-2 பொதுத்தேர்வுகள் நாளை (திங்கட்கிழமை) தொடங்குகிறது. இந்த தேர்வு அடுத்த மாதம் 3-ந் தேதி வரை நடைபெறுகிறது. சேலம் மாவட்டத்தை பொறுத்தவரையில் பிளஸ்-2 தேர்வை 18 ஆயிரத்து 830 மாணவர்களும், 20 ஆயிரத்து 443 மாணவிகளும் என மொத்தம் 39 ஆயிரத்து 273 பேர் எழுதுகிறார்கள்.

இதற்காக மாவட்டம் முழுவதும் 156 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. 149 தேர்வு மையங்கள் பள்ளி மாணவர்களுக்காகவும், 7 தேர்வு மையங்கள் தனித்தேர்வர்களுக்காகவும் அமைக்கப்பட்டுள்ளது. இந்த தேர்வு மையங்களில் உள்ள மேஜைகள் மீது மாணவ, மாணவிகளின் தேர்வு எண்ணை எழுதி ஒட்டும் பணியில் சம்பந்தப்பட்ட பள்ளி ஆசிரியர்கள் ஈடுபட்டு வருகிறார்கள். சேலம் கோட்டை அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்-2 தேர்வு மாணவிகளின் தேர்வு எண்ணை மேஜையில் ஒட்டும் பணியில் நேற்று ஆசிரியர்கள் மும்முரமாக ஈடுபட்டனர்.

பறக்கும் படைகள்

இதனிடையே, தேர்வில் எவ்வித முறைகேடும் இல்லாமல் நடத்துவதற்கு கல்வித்துறை அதிகாரிகள் தலைமையில் பறக்கும் படைகள் அமைக்கப்பட்டுள்ளது. இவர்கள், தேர்வு மையங்களுக்கு திடீரென சென்று தேர்வுகள் நடைபெறுவதை கண்காணிப்பார்கள். ஹால்டிக்கெட்டில் உள்ள விதிமுறைகளை மாணவ, மாணவிகள் நிச்சயம் பின்பற்ற வேண்டும். விடைத்தாளில் நீலம் அல்லது கருப்பு நிற பேனாவால் மட்டுமே எழுத வேண்டும். எக்காரணம் கொண்டும் கலர் பென்சில், பேனாவால் தேர்வு எழுதக்கூடாது.

தேர்வு மையத்திற்குள் ஆசிரியர்கள் மட்டுமின்றி மாணவ, மாணவிகளும் செல்போன்கள் எடுத்துவர அனுமதி இல்லை. சேலம் மாவட்டத்தில் பிளஸ்-2 தேர்வை நடத்துவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் உள்ளதாக கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதேபோல், சேலம் மாவட்டத்தில் நாளை மறுநாள் (செவ்வாய்கிழமை) பிளஸ்-1 பொதுத்தேர்வுகள் தொடங்குகிறது. இந்த தேர்வை 16,706 மாணவர்களும், 19,437 மாணவிகளும் என மொத்தம் 36,143 பேர் எழுதுகிறார்கள். இந்த தேர்வுக்காக மாவட்டத்தில் 156 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

மேலும் செய்திகள்