350 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல்; 2 பேர் கைது
பாப்பாக்குடி அருகே 350 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல்; செய்யப்பட்டது. இதுதொடர்பாக 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
முக்கூடல்:
நெல்லை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சிலம்பரசன் அறிவுறுத்தலின் பேரில் அம்பை துணை சூப்பிரண்டு சதீஸ்குமார் தலைமையில் அம்பை உட்கோட்ட பகுதியில் போதைப் பொருள் நடமாட்டத்தை தடுக்கும் பொருட்டு போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வந்தனர். இந்நிலையில் நேற்று பாப்பாக்குடி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஆபிரகாம் மற்றும் போலீசார் பள்ளக்கால் பொதுக்குடியில் ரோந்து சென்றனர். அங்கு சந்தேகப்படும்படியாக மூட்டைகளை ஏற்றி வந்த லோடு ஆட்டோவை நிறுத்தினர்.
ஆட்டோவில் வந்தவர்களிடம் விசாரித்தபோது முன்னுக்கு பின் முரணாக பேசினர். இதையடுத்து லோடு ஆட்டோவை சோதனை செய்தபோது அரசால் தடை செய்யப்பட்ட 350 கிலோ புகையிலை பொருட்கள் இருந்தது தெரியவந்தது. விசாரணையில், ஆலங்குளம் அண்ணாநகர் பகுதியைச் சேர்ந்த காமராஜ், குருவன்கோட்டை அம்பலத்தார் தெருவை சேர்ந்த சிவன் பெருமாள் என்பதும் தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவர்கள் இருவரையும் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து லோடு ஆட்டோவுடன் புகையிலை பொருட்களையும், ஒரு மோட்டார் சைக்கிளையும் பறிமுதல் செய்தனர்.