33 குழந்தை திருமணங்கள் தடுத்து நிறுத்தம்

மாவட்டத்தில் கடந்த 3 மாதங்களில் 33 குழந்தை திருமணங்கள் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது.

Update: 2022-09-05 17:54 GMT

வடகாடு:

வடகாடு அருகே மாங்காடு அரசு மேல்நிலைப்பள்ளியில் ஆசிரியர் தின விழா, நாணய கண்காட்சி மற்றும் கலை இலக்கிய நிகழ்ச்சி என முப்பெரும் விழா நடந்தது. விழாவிற்கு பள்ளியின் தலைமை ஆசிரியர் பாக்கியராஜ் தலைமை தாங்கினார். விழாவில் புதுக்கோட்டை மாவட்ட குழந்தைகள் நல குழுமத்தலைவர் சதாசிவம் கலந்து கொண்டு பேசுகையில், மாவட்டத்தில் கடந்த 3 மாதங்களில் 33 குழந்தை திருமணங்கள் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளன. நம் மாவட்டத்தை பொருத்த வரையில் பொன்னமராவதி, விராலிமலை, அன்னவாசல், அறந்தாங்கி உள்ளிட்ட வட்டாரங்களில் இருந்து அதிக எண்ணிக்கையில் குழந்தை திருமணங்கள் நடப்பதாக, குழந்தைகள் பாதுகாப்புக்கான கட்டணமில்லா எண் 1098-க்கு புகார்கள் வருகின்றன. எனவே, மாவட்டம் முழுவதும் மாணவ-மாணவிகளிடையே ஆசிரியர்கள் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். அதோடு, அத்தகைய குற்றங்களில் ஈடுபடுவோர் மீதான அரசின் நடவடிக்கைகள் குறித்தும் அறிவுறுத்தல் தேவைப்படுகிறது. குடும்ப வறுமையை காரணம் காட்டி சிறுமிகளை வேலைக்கு அனுப்புதல் கூடாது. பொதுவாக 13-ல் இருந்து 19 வயது வரை கல்வியைத் தவிர வேறு எதைப்பற்றியும் கவலைகொள்ளாமல், கவனச்சிதறல்களுக்கு ஆளாகாமல் மாணவிகள் இருக்க வேண்டும் என்று கூறினார். மேலும் மாவட்ட நாணயவியல் கழகத்தின் தலைவர் பஷீர் அலி தலைமையில் பல்வேறு நாடுகளின் நாணயங்கள், பணத்தாள், அஞ்சல் கவர், அஞ்சல் தலைக்கண்காட்சி நடத்தப்பட்டது. விழாவில், பேச்சு, பாடல், நடனம், கவிதை வாசிப்பு உள்ளிட்ட கலை, இலக்கிய போட்டி நடைபெற்றதோடு, அதில் வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளுக்கு பாராட்டும் தெரிவிக்கப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்