நாடாளுமன்ற, சட்டமன்றங்களில் மகளிருக்கு 33 சதவீத இடம் மசோதா வரவேற்புடையதா?; சமூக ஆர்வலர்கள் கருத்து

நாடாளுமன்ற, சட்டமன்றங்களில் மகளிருக்கு 33 சதவீத இடம் மசோதா வரவேற்புடையதா? என்பது குறித்து சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

Update: 2023-09-20 21:00 GMT

நாடாளுமன்றத்தின் இரு அவைகள் மற்றும் மாநில சட்டசபை ஆகியவற்றில் பெண்களுக்கு 33 சதவீதம் இட ஒதுக்கீட்டை உறுதி செய்வதற்கான மசோதா மக்களவையில் நேற்று நிறைவேறியது. நாடாளுமன்ற மேலவையிலும் இது நிறைவேறிய பிறகு சட்டவடிவம் பெறும். 2021-ம் ஆண்டு நடத்தப்பட வேண்டிய மக்கள் தொகை கணக்கெடுப்பு இந்தியாவில் நடத்தப்படவில்லை. எனவே மக்கள் தொகை கணக்கு எடுப்புக்குப் பிறகு 2029-ம் ஆண்டு வாக்கில் பெண்களுக்கான இட ஒதுக்கீடு சட்டம் நடைமுறைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பெரும்பாலான கட்சிகள் பெண்களுக்கான 33 சதவீத இட ஒதுக்கீட்டை வரவேற்கின்றன. பிரதான கட்சிகள் உள் ஒதுக்கீடு கேட்கின்றன. 2010-ம் ஆண்டு இந்த இட ஒதுக்கீடு மசோதா மாநிலங்களவையில் ஏற்கனவே நிறைவேற்றப்பட்டு மக்களவையில் நிறைவேறாமல் போனது குறிப்பிடத்தக்கது.

இத்தனை ஆண்டுகளாக கிடப்பில் கிடந்த இந்த மசோதா தற்போது அவசர, அவசரமாக நிறைவேற்ற காரணம் என்ன என்பது குறித்து மாறுபட்ட கருத்துகள் எழுந்து உள்ளன.

இதுபற்றி சமூக ஆர்வலர்கள் சிலர் தெரிவித்த கருத்துக்கள் வருமாறு:-

உரிய பிரதிநிதித்துவம்

தேனியை சேர்ந்த எழுத்தாளர் அம்முராகவ் கூறும்போது, "மகளிர் இடஒதுக்கீடு மசோதா என்பது நீண்ட காலமாகவே எதிர்பார்த்துக்கொண்டு இருப்பது. தற்போது கொண்டு வந்தது என்பது மகிழ்ச்சியான விஷயம். அதை சீக்கிரம் அமல்படுத்த வேண்டும். தேர்தலுக்கான அரசியல் நகர்வாக மட்டுமே இந்த மசோதா இருந்து விடக்கூடாது. அதே நேரத்தில் மகளிருக்கான இடஒதுக்கீடு என்று வரும் போது, அதில் எஸ்.சி., எஸ்.டி. மற்றும் இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கான இடஒதுக்கீடும் கட்டாயம் இருக்க வேண்டும். அனைத்து பெண்களுக்கும் உரிய பிரதிநிதித்துவம் கிடைக்க வேண்டும். இந்த மசோதா விவகாரத்தில் அரசியல் கட்சிகள் நாங்கள் தான் கொண்டு வந்தோம் என்று பேசிக்கொண்டிருப்பதை விட, விரைவில் அமல்படுத்த அனைத்து கட்சிகளும் ஒற்றுமையாக செயல்பட வேண்டும்" என்றார்.

உள்ஒதுக்கீடு

அனைத் திந்திய ஜனநாயக மாதர் சங்க தேனி மாவட்ட துணைத் தலைவர் வெண்மணி கூறும்போது, "9 ஆண்டுகளுக்கும் மேல் ஆட்சியில் இருக்கும் பா.ஜ.க. இத்தனை ஆண்டுகளுக்கு பிறகு, தற்போது மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தாக்கல் செய்து இருப்பது அடுத்த தேர்தலுக்கான ஏமாற்று வேலையாக தான் இருக்கும் என்று பார்க்க தோன்றுகிறது. இதில் உள்ஒதுக்கீடு கிடையாது என்று சொல்கிறார்கள். சிறுபான்மை மற்றும் பட்டியலின மக்களை ஏமாற்றும் வகையில் இருக்கிறது. மக்கள் தொகை கணக்கெடுப்பு எடுத்து, தொகுதிகள் மறுவரையறை செய்த பிறகு தான் இது அமல்படுத்தப்படும் என்று சொல்லப்படுகிறது. எனவே இந்த மசோதாவில் உள்ள குளறுபடிகளை சரிசெய்ய வேண்டும். அனைத்து தரப்பு பெண்களுக்கும் வாய்ப்பளிக்க வேண்டும்" என்றார்.

மகிழ்ச்சி அளிக்கிறது

கம்பத்தை சேர்ந்த இல்லத்தரசி சங்கீதா கூறும்போது, "நாடு சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகளை கடந்த பிறகு அரசியலில் ஆணுக்கு, பெண் நிகர் என்ற சமத்துவம் முழுமையாக கிடைக்கவில்லை. நாட்டில் உள்ள எம்.எல்.ஏ.க்களில் 10 சதவீதம் கூட பெண்கள் இல்லை என்று சொல்லப்படுகிறது. அதற்கு முன்னோடியாக தமிழகத்தில் உள்ளாட்சிகளில் 50 சதவீதம் பெண்களுக்கு இடஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது. அதன்மூலம் உள்ளாட்சிகளில் பெண்கள் தங்களுக்கான அங்கீகாரத்தை பெற்றிருக்கிறார்கள். அந்த வகையில், சட்டமன்ற, நாடாளுமன்றங்களில் 33 சதவீதம் வாய்ப்பளிக்கும் வகையில், மகளிர் இடஒதுக்கீடு மசோதா தாக்கல் செய்யப்பட்டு இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. அதை மனதார வரவேற்கிறேன். தாமதமின்றி அதை சட்டமாக்கி விரைவில் அமல்படுத்த வேண்டும். அரசியல் மட்டுமின்றி அனைத்து துறைகளிலும் பெண்களுக்கு 33 சதவீத இடஒதுக்கீடு முறையை கொண்டு வர வேண்டும்" என்றார்.

தேனியை சேர்ந்த சமூக ஆர்வலர் தமிழரசி கூறும்போது, "தாமதிக்கப்பட்ட நீதி, மறுக்கப்பட்ட நீதி என்று சொல்வார்கள். அதுபோல உலகில் சரிபாதியாக இருக்கிற பெண்களுக்கு காலம், காலமாக பல்வேறு அநீதிகள் நடந்தேறி வரும் வேளையில் சமூகநீதி அடிப்படையில் பெண்களுக்கான ஆண்களை விடவும் அதிக இடஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும். குறைந்தபட்சம் சம நீதி அடிப்படையிலாவது 50 சதவீத இட ஒதுக்கீடு வழங்கியாக வேண்டியது காலத்தின் தேவை. இருந்தாலும் பல்வேறு காலகட்டங்களில் பெண்களுக்கான 33 சதவீத சட்ட மசோதா நிறைவேற்றப்படாமல் முட்டுக்கட்டை போட்டு தடுக்கப்பட்டு வந்த நிலையில் தற்போது அதற்கான மசோதா தாக்கல் செய்யப்பட்டிருப்பதை மனதார வரவேற்கிறேன். தற்போது இந்த மசோதா தாக்கல் செய்யப்பட்டு இருப்பது அரசியல் ஆதாயத்திற்காகவா என்கிற கேள்வியும் எழுகிறது. இந்த இட ஒதுக்கீட்டில் சிறுபான்மையினர், பட்டியல் மற்றும் பழங்குடியினர், இதர பிற்படுத்தப்பட்ட பெண்களுக்கான உள் இட ஒதுக்கீட்டை உறுதி செய்ய வேண்டும்" என்றார்.

இவ்வாறு அவர்கள் கூறினர். 

Tags:    

மேலும் செய்திகள்