31 சங்க தலைவர்கள் போட்டியின்றி தேர்வு

குமரி மாவட்டத்தில் நீரினை பயன்படுத்துவோர் சங்க தேர்தலில் 31 சங்கங்களுக்கு தலைவர்கள் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர்.

Update: 2023-04-23 18:45 GMT

நாகர்கோவில், 

குமரி மாவட்டத்தில் நீரினை பயன்படுத்துவோர் சங்க தேர்தலில் 31 சங்கங்களுக்கு தலைவர்கள் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர்.

வேட்புமனு தாக்கல்

கோதையாறு வடிநில கோட்டத்தில் அமைந்துள்ள 46 நீரினை பயன்படுத்துவோர் சங்கங்களின் தலைவர்கள் மற்றும் ஆட்சி மண்டல தொகுதி உறுப்பினர்கள் பதவிகளை நிரப்புவதற்கான தேர்தல் நேற்று நடந்தது. முன்னதாக தலைவர் பதவிக்கு 56 வேட்புமனுக்களும், உறுப்பினர் பதவிக்கு 114 வேட்புமனுக்களும் பெறப்பட்டன. அவற்றை கூர்ந்தாய்வு செய்து மனுக்களின் பட்டியல் 15-ந் தேதி வெளியிடப்பட்டது. அப்போது தலைவர் பதவிக்கு தாக்கல் செய்த 3 பேரின் வேட்புமனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டது. 2 பேர் வேட்புமனுக்களை வாபஸ் பெற்றனர். மீதமுள்ள 51 வேட்புமனுக்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டன.

இதே போல உறுப்பினர் பதவிக்கான வேட்பு மனுக்களில் 5 வேட்புமனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன. 2 வேட்புமனுக்கள் திரும்பப் பெறப்பட்டன. மீதமுள்ள 107 வேட்புமனுக்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டன.

போட்டியின்றி தேர்வு

இதில் 31 நீரினை பயன்படுத்துவோர் சங்கங்களின் தலைவர் பதவிக்கு வேட்புமனு தாக்கல் செய்தவர்கள் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர். இதே போல உறுப்பினர் பதவிகளுக்கும் 92 பேர் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டனர். மேலும் பல பதவிகளுக்கு போட்டியிட யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லை.

இந்த நிலையில் அகஸ் தீஸ்வரம் தாலுகாவில் 3 தலைவர்கள் பதவிக்கும், ஒரு உறுப்பினர் பதவிக்கும் நேற்று தேர்தல் நடந்தது. அந்த வகையில் பறக்கின்கால் நீரினை பயன்படுத்துவோர் சங்கம், தோவாளை சானல் மருத்துவாழ்மலை, அனந்தனார் கடைவரம்பு நீரினை பயன்படுத்துவோா் சங்கம் ஆகிய 3 சங்கங்களின் தலைவர் பதவிக்கும், அனந்தனார் கடைவரம்பு நீரினை பயன்படுத்துவோர் சங்கத்தில் ஒரு உறுப்பினர் பதவிக்கும் தேர்தல் நடந்தது.

வாக்குப்பதிவு

இதற்கான வாக்குப்பதிவு சூரங்குடி அரசு பள்ளி, கொட்டாரம் அரசு மேல்நிலைப்பள்ளி, தெங்கம்புதூர் அரசு உயர்நிலைப்பள்ளி, அழகப்பபுரம் பெண்கள் பள்ளி ஆகிய 4 இடங்களில் நடந்தது. வாக்குப்பதிவானது காலை 7 மணிக்கு தொடங்கி மதியம் 2 மணி வரை நடந்தது. பின்னர் மாலை 4 மணிக்கு வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டது.

அந்த வகையில் பறக்கின்கால் நீரினை பயன்படுத்துவோர் சங்க தலைவராக ரவீந்திரன், தோவாளை சானல் மருத்துவாழ்மலை சங்க தலைவராக ஞானஜேசு ஆன்றோ, அனந்தனார் கடைவரம்பு நீரினை பயன்படுத்துவோர் சங்க தலைவராக அருள் ஆகியோர் வெற்றி பெற்றனர். அனந்தனார் கடைவரம்பு நீரினை பயன்படுத்துவோர் சங்க உறுப்பினராக ராமசந்திரன் வெற்றி பெற்றார்.

Tags:    

மேலும் செய்திகள்